இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான நான்கு போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றன. இதேவேளை புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் NCC அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஆரம்பமாகியது.
SSC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
நேற்றைய தினம் திமுத் கருணாரத்ன (149) மற்றும் தனுஷ்க குணதிலக (117) ஆகியோரின் அபார ஆட்டத்தின் காரணமாக 5 விக்கெட்டுகளை இழந்து 375 ஓட்டங்களைப் பெற்றிருந்த SSC அணி, இன்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்க மற்றும் தசுன் ஷானக அரைச்சதங்கள் கடந்ததுடன், கீழ்வரிசை வீரர் ஜெப்ரி வெண்டர்சே ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதன்படி SSC அணி 503 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து களமிறங்கிய தமிழ் யூனியன் அணி, இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தரங்க பரணவிதான 66 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன், தினுக் விக்ரமநாயக ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார்.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
SSC – 503 (127.4) – திமுத் கருணாரத்ன 149, தனுஷ்க குணதிலக 117, சரித் அசலங்க 57, தசுன் ஷானக 51, ஜெப்ரி வெண்டர்சே 48*
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 171/2 – (48) – தினுக் விக்ரமநாயக 81*, தரங்க பரணவிதான 66
இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் BRC
முதல் நாள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றிருந்த இராணுவ விளையாட்டுக் கழகம், இன்று 316 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி வீரர் அசேல குணரத்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இவரைத் தவிர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லக்ஷித மதுஷான் 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்திய விகும் சஞ்சய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய BRC அணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அணித்தலைவர் ருமேஷ் புத்திக 92 ஓட்டங்களையும் லிசுர லக்ஷான் 60 ஓட்டங்களையும் குவித்தனர். பந்துவீச்சில் விராஜ் புஷ்பகுமார 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த இராணுவ அணி, ஆட்ட நேர முடிவின் போது 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையிலிருந்தது.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 316 (98.1) – அசேல குணரத்ன 158, லக்ஷித மதுஷான் 67, விகும் சஞ்சய 6/73, தினுக ஹெட்டியாரச்சி 3/98
BRC (முதல் இன்னிங்ஸ்) – 219 (67.4) – ருமேஷ் புத்திக 92, லிசுர லக்ஷான் 60, விராஜ் புஷ்பகுமார 4/57
இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 16/2 (10)
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றிருந்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 95 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.
எனினும் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய செரசன்ஸ் அணி 173 ஓட்டங்களுக்கே சுருண்டது. துடுப்பாட்டத்தில் தனித்து போராடிய இரோஷ் சமரசூரிய 69 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் லஹிரு கமகே மற்றும் லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
22 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட கொழும்பு கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்தது. சிறப்பாக பந்துவீசிய சதுர ரந்துனு 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, கொழும்பு கிரிக்கெட் கழக அணியினர் 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வனிது ஹசரங்க 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இதன்படி 231 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 195 (52.2) – சச்சித் பதிரன 59, வனிது ஹசரங்க 52, கசுன் ராஜித 6/59
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173 (52) – இரோஷ் சமரசூரிய 69, லஹிரு கமகே 3/38, லக்ஷான் சந்தகன் 3/38
கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 208 (46.3) – வனிது ஹசரங்க 64, சதுர ரந்துனு 5/66
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 25/2 (8)
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்
நேற்றைய தினம் 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த பதுரெலிய விளையாட்டுக் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 220 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.
எனினும் அபாரமாக பந்துவீசிய மலிந்த புஷ்பகுமார (6/41) மற்றும் மதுக லியனபதிரனகே (4/28) தமக்கிடையே 10 விக்கெட்டுகளையும் பகிர்ந்துகொள்ள, பதுரெலிய அணி 113 ஓட்டங்களுக்கே சுருண்டது.
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அணித்தலைவர் மஹேல உடவத்த மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், விதுர அதிகாரி ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார்.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 235 (79.3) – மஹேல உடவத்த 69, அலங்கார அசங்க 5/102, நுவன் கருணாரத்ன 3/35
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 113 (44) – ஷெஹான் பெர்னாண்டோ 25, மலிந்த புஷ்பகுமார 6/41, மதுக லியனபதிரனகே 4/28
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 196/5 (51) – மஹேல உடவத்த 73, விதுர அதிகாரி 45
NCC எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்
இன்று ஆரம்பமான போட்டியொன்றில் NCC அணியும் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகமும் மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புளூம்பீல்ட் அணி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது.
எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த நிரோஷன் திக்வெல்ல 155 பந்துகளில் 23 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக 188 ஓட்டங்களை விளாசினார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய பர்வீஸ் மஹ்ரூப், சந்துன் வீரக்கொடி மற்றும் உபுல் தரங்க ஆகியோர் அறுபது ஓட்டங்களைக் கடந்தனர்.
இதன்படி வெறும் 84 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றிருந்த NCC அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் சிறப்பித்த ஒரே வீரரான மலித் டி சில்வா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்றைய தினம் 4 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் களமிறங்கிய புளூம்பீல்ட் அணி விக்கெட் இழப்பேதுமின்றி 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
NCC – 443/9 (84) – நிரோஷன் திக்வெல்ல 188, பார்வீஸ் மஹ்ரூப் 67, சந்துன் வீரக்கொடி 64, உபுல் தரங்க 61, மலித் டி சில்வா 5/83
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 9/0 (4)