இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டியொன்று இன்று நிறைவு பெற்றது. புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் காலி கிரிக்கெட் கழக அணிகளுக்கிடையிலான இப்போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
நேற்று முன்தினம் புளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புளூம்பீல்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அதீஷ நாணயக்கார 78 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி 276 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
லஹிரு ஜயகொடி (48) மற்றும் வினோத் பெரேரா (46) அரைச் சதங்களை தவறவிட்ட நிலையில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் ரொஷான் ஜயதிஸ்ஸ 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சஜீவ வீரகோன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய காலி கிரிக்கெட் கழகம், எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள இயலாத நிலையில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் தமித ஹுனுகும்புர அதிகபட்சமாக 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
அபாரமாக பந்து வீசிய மலித் டி சில்வா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான லஹிரு பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி 91 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக்கொண்ட புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 165 பந்துகளில் 11 பௌண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 183 ஓட்டங்கள் விளாசினார்.
மேலும் டிரான் தனபால 66 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளை இழந்து 343 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்து வீச்சில் காலி கிரிக்கெட் கழகத்தின் சலன டி சில்வா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இதனை தொடர்ந்து 435 என்ற பாரிய இலக்கை நோக்கி காலி கிரிக்கெட் கழகம் ஆடுகளம் பிரவேசித்தது. மீண்டும் தனது பந்து வீச்சினால் எதிரணியை தடுமாறச் செய்த மலித் டி சில்வா 3 விக்கெட்டுகள் வீழ்த்த, காலி கிரிக்கெட் கழகம் ஒரு கட்டத்தில் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.
எனினும் இம்முறை கீழ்வரிசை வீரராக களமிறங்கிய தமித ஹுனுகும்புர ஆட்டமிழக்காது மற்றுமொரு அரைச்சதம் குவித்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய A.K. டிரோன் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அதன்படி காலி கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டம் நிறைவுக்கு வந்ததுடன், போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. எனினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டதன் காரணமாக புளூம்பீல்ட் அணி அதிக புள்ளிகளை சுவீகரித்துக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 276 (100.3) – அதீஷ நாணயக்கார 78, லஹிரு ஜயக்கொடி 48, வினோத் பெரேரா 46, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/64, சஜீவ வீரக்கோன் 3/85
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 185 (54.2) – தமித ஹுனுகும்புர 54, சலன டி சில்வா 32, மலித் டி சில்வா 5/60, லஹிரு பெர்னாண்டோ 3/52
புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 343/7 (69.2) – நிபுன் கருணநாயக்க 183, டிரான் தனபால் 66, சலன டி சில்வா 3/100
காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்): 220/7 (55) – தமித ஹுனுகும்புர 56*, A.K. டிரோன் 41*, மலித் டி சில்வா 3/37
முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 13.65
காலி கிரிக்கெட் கழகம் – 4.58