இலங்கை இரண்டாம் நிலை அணிகள் முக்கிய போட்டிகளில் பங்கேற்பு

238

இலங்கை கிரிக்கெட் A அணி மற்றும் வளர்ந்துவரும் அணிகளுக்கு எதிர்வரும் மாதங்களில் முக்கிய சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் சபையால் முடிந்திருப்பதாக ThePapare.com இற்கு தெரியவந்துள்ளது.

இலங்கை A அணி இந்திய A அணியுடன் இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்று ஐந்து உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இலங்கை வளர்ந்துவரும் அணியும் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிராக போட்டித் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

உலகக் கிண்ண குழாத்திலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்

இலங்கை A அணி மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒரு மாத சுற்றுப்பயணமாக இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது. வளர்ந்துவரும் அணி ஜுன் மாதம் நடுப்பகுதியில் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.  

பணம் கொழிக்கும் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் முடிவுற்ற விரைவில் இலங்கை மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஆரம்பமாகவிருப்பதோடு, சர்வதேச அரங்கில் இலங்கை வீரர்களுக்கு தமது திறமையை வெளிப்படுத்த சிறந்த சந்தர்ப்பமாக இது உள்ளது.   

வளர்ந்துவரும் அணிகளில் கடந்த காலங்களில் விளையாடிய பல வீரர்களுக்கும் இலங்கை தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. தேசிய அணியின் இடம் கிடைக்காத நிரோசன் திக்வெல்ல, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, துஷ்மன்த சமீர மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் A அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.    

A அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர பயிற்சியாளராக செயற்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அண்மைக் காலத்தில் A அணிக்காக சிறந்த பங்காற்றிய அவிஷ்க குணவர்தன வளர்ந்து வரும் அணிக்கு பயிற்சியாளராக இணையவுள்ளார்.

அண்மைய உயிர்த்தெழும் ஞாயிறு குண்டு தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தை இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் ஒத்திவைத்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தென்னாபிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டி நடைபெறவிருப்பதால் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் சிலரும் வளர்ந்துவரும் அணியில் சேர்க்கப்படவுள்ளனர்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<