இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் போட்டித்தொடரின் சம்பியனாக காலி அணி முடிசூடியுள்ளது.
பல்லேகலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கண்டி அணியை எதிர்த்தாடிய காலி அணி 7 விக்கடெ்டுகள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்திருந்தது.
>>குசல் மெண்டிஸின் T20 சதத்துடன் SLC யெல்லோவ் அணிக்கு வெற்றி<<
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி முதல் இன்னிங்ஸில் 316 ஓட்டங்களை குவித்தது. கண்டி அணி சார்பாக சித்தார கிம்ஹான 90 ஓட்டங்களையும், சஹான் கோஷல 84 ஓட்டங்களையும், அஷைன் டேனியல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி அணியின் பந்துவீச்சில் அசங்க மனோஜ் 3 விக்கெட்டுகளையும், தனன்ஜய லக்ஷான், திலங்க உதேசேன மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ரமேஷ் மெண்டிஸ் 111 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு உதவினார். பந்துவீச்சில் சிதும் திசாநாயக்க, நிம்ஷார அதரகல்ல மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 12 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி தடுமாற தொடங்கியிருந்தது. நிஷான் பீரிஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற 163 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரவீன் யஷஸ் 45 ஓட்டங்களையும், புலின தரங்க 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தநிலையில் 178 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 27.4 ஓவர்கள் நிறைவில் வெறும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஓசத பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, லக்ஷித எதிரிசிங்க 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரமேஷ் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக சொனால் தினுஷ, சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக ஓசத பெர்னாண்டோ மற்றும் பசிந்து சூரியபண்டார ஆகியோரும், சிறந்த பந்துவீச்சாளராக வனுஜ சஹானும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<