வடக்கு, கிழக்கிலும் பெண்களுக்கான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்

291

இலங்கையில் பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாடசாலை அணிகளுக்கு இடையிலான பெரும் சமர் (Big Match) கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா

விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஓவ்வொரு வீர வீராங்கனையும்…

இதன்படி, பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் தொடர் இன்று முதல் வடக்கிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் வவுனியா இந்துக் கல்லூரியும், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியும் பலப்பரீட்சை நடத்துகின்றது.

இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மற்றும் சந்திவெலி கல்லூரிக்கும் இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி சிவானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பெண்கள் பாடசாலை அணிகளுக்கு இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது தேசத்தின் நலனுக்கு சிறந்தது எனவும், இதனால் இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணுவதற்கான சிறந்த தருணமாக அமையும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெண்கள் கிரிக்கெட்டின் பிரதானி அப்சரி திலக்கரட்ன தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவின் ஆலோசனைக்கமைய கடந்த வருடமும் வெற்றிகரமாக இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் பெரும் சமர் கிரிக்கெட் தொடரில் இம்முறையும் அதிகளவான பாடசாலைகள் பங்குபற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (08) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

”பாடசாலை மாணவிகளுக்கு இடையில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். அத்துடன், நாட்டிலுள்ள பாடசாலைகளில் பெண்கள் மத்தியில் பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன் மூலம், கிரிக்கெட் மீதான ஆர்வம் அவர்கள் மத்தியில் அதிகரிப்பதுடன், திறமையான வீராங்கனைகளை இதன்மூலம் இனங்கண்டு கொள்ளவும் முடியும். கடந்த வருடமும் நாங்கள் 10 பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியிருந்தோம். தற்போது நாம் கொழும்புக்கு வெளியிலும் போட்டிகளை நடத்தி வருகின்றோம். எனினும், இவ்வருடம் போட்டிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அண்மைக்காலமாக பெண்களுக்கான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுவருவது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய நன்மையைப் பெற்றுக்கொடுக்கும்” எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இப்போட்டிகளை நடத்துவதன் மூலம் நாடுபூராகவும் உள்ள திறமையான மாணவிகளுக்கு எதிர்காலத்தில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டவுள்ளது. எனவே, கிரிக்கெட் விளையாட்டானது அவர்களின் எதிர்கால முன்னேறத்திற்கு உந்து சக்தியாக அமைவதுடன், இன நல்லுறவுக்கும் பாலமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதியில் 11 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், 50 ஓவர்களைக் கொண்ட இப்போட்டிகள் அனைத்தும் பாய் விரிப்பு ஆடுகளத்தில் கடின பந்தில் விளையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் பெண்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அண்மையில் மைதான வசதிகளையும், விளையாட்டு உபகரணங்களையும் செய்துகொடுத்து இருந்ததுடன், ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மாபெரும் கிரிக்கெட் போட்டி அட்டவணை

பாடசாலைகள் இடம் திகதி
வாத்துவ மத்திய கல்லூரி  எதிர் பாணந்துறை மஹானாம மகா வித்தியாலயம் பாணந்துறை 12.03.2018
நமது மகளிர் கல்லூரி எதிர் காமினி மத்திய கல்லூரி, நுவரெலியா நுவரெலியா நகர சபை மைதானம் 06.03.2018
வவுனியா இந்துக் கல்லூரி எதிர் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி வவுனியா நகர சபை மைதானம் 09.05.2018
ரத்னாவலி பெண்கள் கல்லூரிகம்பஹா எதிர் அநுலா வித்தியாலயம்நுகேகொட ஆர்.பிரேமதாஸ மைதானம் 11.05.2018
புனித அந்தோனியார் கல்லூரி எதிர் நுகவெல மத்திய கல்லூரிகண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானம் 18.05.2018
ஒக்கம்பிடிய விஜயபாகு வித்தியாலயம் எதிர் எத்திலிவௌ மத்திய கல்லூரி மொனராகல 25.05.2018
கந்தலாய் மத்திய கல்லூரி எதிர் சிங்கள மகா வித்தியாலயம்கந்தலாய் சிங்கள மகா வித்தியாலய மைதானம், கந்தலாய் 31.05.2018
மகாஜனா கல்லூரி எதிர் சந்திவெலி கல்லூரிமட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானம் 01.06.2018
தெஹியத்தகண்டிய தேசிய கல்லூரி எதிர் மெதகம மத்திய கல்லூரி அம்பாறை 08.06.2018
கொலம்பகே அரா கல்லூரி எதிர் குருவிட மத்திய கல்லூரிஇரத்தினபுரி இரத்தினபுரி பின்னர் அறிவிக்கப்படும்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் மகளிர் கல்லூரி எதிர் பௌத்த மகளிர் கல்லூரிகல்கிஸ்ஸ எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானம், தெஹிவலை பின்னர் அறிவிக்கப்படும்
விஷாகா கல்லூரி எதிர் பதுளை மத்திய கல்லூரி பதுளை பின்னர் அறிவிக்கப்படும்
அநுர வித்தியாலயம் எதிர் தலள்ள தர்ம விஜய வித்தியாலயம் மாத்தறை பின்னர் அறிவிக்கப்படும்