இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மற்றும் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, ஆகியோர் IPL தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை, IPL அணியான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஒப்பந்தம் செய்திருந்தது. இவர்கள் இருவரும் முறையே அவுஸ்திரேலிய வீரர்களான எடம் ஷாம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
>> தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் குசல்!
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் சிறப்பாக பிரகாசித்திருந்த காரணத்தால், இவர்கள் இருவரும் IPL தொடருக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைக்கப்பட்டிருந்தாலும், இவர்கள் IPL தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியிருக்கவில்லை. எனினும், தற்போது, இவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடர் நிறைவுடன் இவர்கள் இருவரும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்துக்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
IPL தொடரின் மிகுதிப்போட்டிகள் அடுத்த மாதம் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதைய நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலிருக்கும் பெங்களூர் அணி, மிகுதி உள்ள 7 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<