இளம் துடுப்பாட்ட வீரர் லசித் குரூஸ்புள்ளேயின் அரைச் சதத்தின் உதவியுடன் காலி கிரிக்கெட் கழகத்துடனான ஒருநாள் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள முதல் தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் தொடர் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகியது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் 25 கழகங்கள் 4 குழுக்களில் பங்கேற்றுள்ளன.
இதில் குழு B இல் ஏழு கழகங்கள் இடம்பெற்றுள்ளதுடன், ஏனைய குழு A, C மற்றும் D ஆகிய 3 குழுக்களிலும் தலா 6 கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், போட்டித் தொடரின் 3 ஆவது நாளான இன்று (16) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிலபாம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் காலி கிரிக்கெட் கழகங்கள் பலப்பரீட்சை நடத்தின.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் குரூஸ்புள்ளேயின் அரைச் சதத்தின் (84) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களை எடுத்தது.
கடந்த வாரம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியில் இறுதி லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய வலதுகை துடுப்பாட்ட வீரரான லசித், ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களைப் பெற்று அசத்தினார்.
இதேநேரம், சதுரங்க குமார 40 ஓட்டங்களையும், ஷெஹான் ஜயசூரிய 24 ஓட்டங்களையும் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தனர்.
பந்துவீச்சில் 19 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான கவிக டில்ஷான் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம் சிலாபம் மேரியன்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 73 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அந்த அணிக்காக விதுர துல்சர 27 ஓட்டங்களையும், சாரங்க ராஜகுரு 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் சதுரங்க குமார மற்றும் அருண் மலாயில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கமிந்து மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கழகம் – 241 (48.1) – லசித் குரூஸ்புள்ளே 84, சதுரங்க குமார 40, ஷெஹான் ஜயசூரிய 24, ருமேஷ் புத்திக 20, கவிக டில்ஷான் 4/28
காலி கிரிக்கெட் கழகம் – 73 (32.4) – சதுரங்க குமார 3/15, அருண் மலாயில் 3/19, கமிந்து மெண்டிஸ் 2/15
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 168 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<