இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற்றன. இப்போட்டிகளில் கண்டி மாவட்டம் மற்றும் அநுராதபுரம் மாவட்ட அணிகள் வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன.
கண்டி மாவட்டம் எதிர் நுவரெலியா மாவட்டம்
சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற கண்டி மாவட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த திமுத் கருணாரத்ன அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி சதம் ஒன்றினை விளாசிய போதிலும், ஏனைய வீரர்கள் குறிப்பிடத்தக்க ஓட்ட எண்ணிக்கையை பெறத் தவறினர். இதன் காரணமாக அவ்வணி 43 ஓவர்களில் 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
தனி ஒருவராக அணியை வழிநடத்திய திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை குவித்திருந்தார். நுவரெலியா மாவட்டம் சார்பில் பந்துவீச்சில் அசத்திய ருவிந்து குணசேகர 4 விக்கெட்டுகளையும் நிலங்க சந்தகன் 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.
210 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நுவரெலியா மாவட்ட அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எதிரணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள இயலாமல் திணறிய அவ்வணி 113 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியினை சந்தித்தது.
நுவரெலியா அணியை துவம்சம் செய்த கசுன் மதுஷங்க வெறும் 32 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். துடுப்பாட்டத்தில் பிரமோத் மதுவந்த அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதன்படி கண்டி மாவட்டம் 96 ஓட்டங்களினால் இலகு வெற்றியை பெற்றுக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
கண்டி மாவட்டம்: 209 (43) – திமுத் கருணாரத்ன 110*, தசுன் ஷானக 33, ருவிந்து குணசேகர 4/37, நிலங்க சந்தகன் 3/28
நுவரெலியா மாவட்டம்: 113 (38) – பிரமோத் மதுவந்த 36, கசுன் மதுஷங்க 6/32, நுவன் பிரதீப் 2/20
முடிவு: கண்டி மாவட்டம் 96 ஓட்டங் களினால் வெற்றி
அநுராதபுரம் மாவட்டம் எதிர் பொலன்னறுவை மாவட்டம்
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அநுராதபுரம் மாவட்ட அணி சார்பில் அனைத்து மேல்வரிசை வீரர்களும் சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
லஹிரு ஜயகொடி மற்றும் நிபுன் கருணாநாயக்க 60 ஓட்டங்களை கடந்ததுடன், நிசல் பிரான்சிஸ்கோ 43 ஓட்டங்களை குவிக்க அநுராதபுர அணியானது 50 ஓவர்களில் 266 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்துவீச்சில் பொலன்னறுவை அணியின் யொஹான் டி சில்வா மற்றும் சுரேஷ் பீரிஸ் 3 தலா விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பொலன்னறுவை மாவட்ட அணிக்கு தரிந்து சிறிவர்தன சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்து 64 ஓட்டங்களை குவித்தார். தொடர்ந்து சுலான் ஜயவர்தன 49 ஓட்டங்களை பெற்று நம்பிக்கையளித்த போதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கே ஓய்வறை திரும்பினர். இதன் காரணமாக அவ்வணிக்கு 235 ஓட்டங்களையே பெற்றுக் கொள்ள முடிந்தது.
அநுராதபுரம் மாவட்டம் சார்பாக மலித் டி சில்வா 4 விக்கெட்டுகளையும் இம்ரான் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக் கொண்டனர். இதன்படி அநுராதபுரம் மாவட்ட அணி 31 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது.
போட்டியின் சுருக்கம்
அநுராதபுரம் மாவட்டம்: 266 (50) – லஹிரு ஜயகொடி 62, நிபுன் கருணாநாயக்க 61, நிசல் பிரான்சிஸ்கோ 43, அகீல் இன்ஹாம் 35, யொஹான் டி சில்வா 3/37, சுரேஷ் பீரிஸ் 3/70
பொலன்னறுவை மாவட்டம்: 235 (50) – தரிந்து சிறிவர்தன 64, சுலான் ஜயவர்தன 49, கிரிஷேன் அபொன்சு 30, மலித் டி சில்வா 4/31, இம்ரான் கான் 3/25
முடிவு: அநுராதபுரம் மாவட்டம் 31 ஓட்டங்களினால் வெற்றி