மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் மெதிவ்ஸ், அசேல, திசர

4656

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன. எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் மற்றும் பங்களாதேஷில் நடைபெறவுள்ள இலங்கை அணியின் சுற்றுப்பயணங்களை இலக்காகக் கொண்டு இப்போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் தேசிய அணி வீரர்களோடு சுமார் 80 வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

தேசிய வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அரையிறுதிக்கு தெரிவான SSC

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் …

இதில் கொழும்பு அணியின் தலைவராக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் செயற்படவுள்ளதுடன், கண்டி அணிக்கு இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸும், காலி அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் உபதலைவர் சுரங்க லக்மாலும், தம்புள்ளை அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானம், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம் மற்றும் தம்புள்ளை ரங்கிரி மைதானம் என்பவற்றில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது எதிரணிகளுடன் தலா ஒவ்வொரு முறை மோதவுள்ளன.  

அத்துடன், இந்த தொடரின் இரண்டு போட்டிகள் பகலிரவு போட்டிகளாக (இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படும்) நடைபெறவுள்ளன. இதில் தம்புள்ளை மற்றும் காலி அணிகளுக்கிடையில் தம்புள்ளையில் நடைபெறவுள்ள போட்டியும், கண்டி மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள போட்டியும் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வருட முற்பகுதியில் இடம்பெற்ற பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது உபாதைகளுக்கு உள்ளாகிய இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஷெஹான் மதுஷங்க ஆகியோர் முதல் தடவையாக மாகாணங்களுக்கிடையிலான உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

ஐ.சி.சி T-20 தரவரிசையில் இலங்கை, இந்திய வீரர்கள் முன்னேற்றம்

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ் …

அத்துடன், 2016ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா, மீண்டும் முதல்தரப் போட்டிகளில் விளையாடவுள்ளார். இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே அவர் மீண்டும் முதல்தரப் போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இம்முறை மாகாணங்களுக்கிடையிலான போட்டித் தொடரில் அவர் கொழும்பு அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 32 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள திஸர பெரேரா, ஒரு சதம், 8 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 1,389 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், 55 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும், இலங்கை அணிக்காக 2011ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட திஸர, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 203 ஓட்டங்களையும், 11 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். எனினும், 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் இறுதியாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வருகின்ற, அதேபோன்று இலங்கை அணிக்காக விளையாடிய அனுபவமிக்க வீரர்களான தரங்க பரணவிதாரன (35 வயது), சாமர சில்வா (38 வயது) ஆகியோரும் இம்முறை போட்டித் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

இவற்றுக்கு மேலாக, அண்மைக்காலமாக 19 வயதிக்குட்பட்ட அணியில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 8 வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 20

சர்ச்சைகள் மற்றும் ஆச்சரியங்களுடன் கிரிக்கெட் அரங்கை கடந்து சென்ற இறுதி …

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அநுர தென்னகோன், அரவிந்த டி சில்வா, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் பிரபல தொழிலதிபரும் கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ஹேமக அமரசூரிய ஆகியோரை உள்ளடக்கிய ஐவரடங்கிய குழுவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கமைய இப்போட்டித் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண போட்டித் தொடர் இலங்கை வீரர்களை .சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு தயார்படுத்தும் நோக்கோடு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடராகவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணிகளில் பங்கேற்கும் வீரர்கள் விபரம்

கொழும்பு அணி

தினேஷ் சந்திமால்(தலைவர்), தனஞ்சய டி சில்வா(உதவித் தலைவர்), கௌஷால் சில்வா, ஷெஹான் ஜயசூரிய, லஹிரு திரிமான்ன, பிரிமோஷ் பெரேரா, சாமர சில்வா, அஞ்செலோ பெரேரா, லசித் அபேரத்ன, லஹிரு உதார, வனிந்து ஹசரங்க, திஸர பெரேரா, லசித் எம்புல்தெனிய, தில்ருவன் பெரேரா, லக்ஷான் சந்தகென், துஷ்மன்த சமீர, விஷ்வ பெர்ணான்டோ, கவிஷ்க அன்ஜுல, கமிந்து மெண்டிஸ், நிபுல் மாலிங்க

பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன

முகாமையாளர்சரித் சேனாநாயக்க

காலி அணி

சுரங்க லக்மால்(அணித் தலைவர்), தசுன் சானக(உதவித் தலைவர்), லஹிரு மிலன்த, ருமேஷ் புத்திக, பபசர வடுகே, சம்மு அஷான், ஒசத பெர்னாண்டோ, ரொஷேன் சில்வா, சதுரங்க டி சில்வா, ஜனித் லியனகே, லக்ஷித மதுஷான், சதீர சமரவிக்ரம, அகில தனஞ்சய, மாதவ வர்ணபுர, மொஹமட் டில்ஷாட், உபுல் தரங்க, மலிந்த புஷ்பகுமார, நிசல தாரக, நிசான் பீரிஸ், தனஞ்சய லக்ஷான், அஷேன் பண்டார

பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன

முகாமையாளர் வருண வராகொட

கடைசிப் பந்தில் போட்டியின் முடிவை மாற்றிய வீரர்கள்

சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் …

கண்டி அணி

அஞ்செலோ மெதிவ்ஸ்(தலைவர்), நிரோஷன் திக்வெல்ல(உதவித் தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, பியுமால் பெரேரா, தனுஷ்க குணதிலக, பிரபாத் ஜயசூரிய, அசேல குணரத்ன, தரங்க பரணவிதாரன, மினோத் பானுக, சாமர கபுகெதர, சாமிக கருணாரத்ன, ஜீவன் மெண்டிஸ், லஹிரு குமார, ரமேஷ் மெண்டிஸ், மஹேல உடவத்த, சச்சித் பத்திரன, கசுன் ராஜித, லஹிரு சமரகோன், ஜெஹான் டேனியல், ஹசித போயகொட

பயிற்றுவிப்பாளர்மலிந்த வர்ணபுர

முகாமையாளர் பியால் விஜேதுங்க

தம்புள்ளை அணி  

திமுத் கருணாரத்ன(தலைவர்), குசல் ஜனித் பெரேரா(உதவி தலைவர்), நிபுன் கருணாநாயக்க, மிலிந்த சிறிவர்தன, குசல் மெண்டிஸ், தரிந்து ரத்னாயக்க, சச்சித்ர சேரசிங்க, லஹிரு கமகே, சங்கீத் குரே, அஷான் பிரியன்ஜன், ரங்கன ஹேரத், இஷான் ஜயரத்ன, சானக கொமசாரு, அசித பெர்னாண்டோ, ஜெப்ரி வெண்டர்சே, சச்சித்ர சேனாநாயக்க, ஷெஹான் மதுஷங்க, ஹிமேஷ் ராமநாயக்க, திஸரு ரஷ்மிக்க டில்ஷான்  

பயிற்றுவிப்பாளர் சுமித்ர வர்ணகுலசூரிய

முகாமையாளர் வினோத் ஜோன்

போட்டி அட்டவணை

மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 02ஆம் திகதி வரை

தம்புள்ளை எதிர் கண்டி (கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானம்)

கொழும்பு எதிர் காலி (ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

ஏப்ரல் 08ஆம் திகதி முதல் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை (பகலிரவு போட்டி)

கண்டி எதிர் கொழும்பு (ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

காலி எதிர் தம்புள்ளை (தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை

கொழும்பு எதிர் தம்புள்ளை (தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்)

காலி எதிர் கண்டி (ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானம்)