இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானகவுக்கு 10,000 அமெரிக்க டொலர்களை அபராதமாக இலங்கை கிரிக்கெட் சபை விதித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் வீரர்கள் ஒப்பந்தத்த விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் காரணமாக தசுன் ஷானகவுக்கு 10,000 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>>ஒருநாள் பந்துவீச்சாளர்கள் வரிசையில் தீக்ஸன முதலிடம<<
தசுன் ஷானக இலங்கையில் நடைபெற்று வரும் மூன்று நாள் கழகமட்ட போட்டியில் எஸ்.எஸ்.சி அணிக்காக விளையாடியிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் இவர் உபாதை காரணமாக இடைநடுவில் ஆட்டத்திலிருந்து விலகினார்.
மருத்துவ அறிக்கையை கருத்திற்கொண்டு இவர் போட்டியிலிருந்து விலகுவதற்கும், ஓய்வை எடுத்துக்கொள்ளவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியது.
எனினும் போட்டியிலிருந்து விலகிய தசுன் ஷானக, அதே நாள் மாலை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்று ILT20 தொடரில் விளையாடியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமீறலாக கருதப்பட்ட இந்த விடயத்துக்கு எதிரான விசாரணையின் போது, தசுன் ஷானக தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தத்தையும் தெரிவித்தார்.
அதேநேரம் தன்னுடைய செயலில் ஏமாற்றும் நோக்கம் இல்லை என்று விளக்கமளித்ததுடன், எதிர்காலத்தில் சிறந்த முடிவுகளை எடுத்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு உறுதியளித்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<