முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் T20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
குறிப்பிட்ட இந்த தொடரில் விளையாடுவதற்கான தடையில்லா சான்றிதழை (NOC) இலங்கை கிரிக்கெட் சபை மேற்குறித்த இரண்டு வீரர்களுக்கும் வழங்க மறுத்துள்ளது.
>> மதுஷிகாவின் அபாரத்தால் இலங்கை இளையோர் மகளிருக்கு முதல் வெற்றி
சண்டே டைம்ஸ் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்தபோது குறித்த இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் மற்றும் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள T10 லீக் என்பவற்றுடன் மொத்தமாக 4 லீக்குகளில் மாத்திரம் இலங்கை வீரர்கள் ஒரு வருடத்துக்கு விளையாட முடியும் என்ற விதிமுறையை கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்தது. இதன்காரணமாக வனிந்து ஹஸரங்க மற்றும் தசுன் ஷானக ஆகியோருக்கு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறும் மேஜர் லீக் T20 தொடர் ஜூலை 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை டெக்சாஸில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் முறையே சியாட்டில் ஓர்காஸ் மற்றும் வொஷிங்டன் பிரீடம் அணிகளுக்காக வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<