இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கண்காட்சிப் போட்டியொன்று நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த இந்தப்போட்டியானது அடுத்த மாதம் 5ம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை – பங்களாதேஷ் தொடரில் பார்வையாளர்கள் இல்லை
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியொன்றை நடத்த வேண்டும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் சபையானது, போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் திகதிகளை இன்றைய தினம் (07) உறுதிசெய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் புதிய கிரிக்கெட் சபையொன்றை நியமிக்கும் வரை, தற்காலிக முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள கண்காட்சி போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு ஊடகவியலாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படவுள்ள நிலையில், மைதானத்துக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க