2024ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் சுற்றுத் தொடரின் அரையிறுதியில் நேற்று (05) அமீரக கிரிக்கெட் அணியை (ஐக்கிய அரபு இராச்சியம் – UAE) எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 15 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த அரையிறுதி வெற்றியுடன் 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கும் இலங்கை தெரிவாகியுள்ளது.
மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இரண்டாவது அரையிறுதி அமீரக – இலங்கை மகளிர் அணிகள் இடையே நடைபெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அமீரக வீராங்கனைகள் முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்ததோடு, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை மகளிர் துடுப்பாட்டம் சார்பில் விஷ்மி குணரட்ன 44 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். அமீரக மகளிர் அணி பந்துவீச்சில் வைஷ்னவே மஹேஷ், எஷா ஒஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 150 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அமீரக மகளிர் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
அமீரக அணியின் துடுப்பாட்டத்தில் வெற்றிக்காக போராடிய எஷா ஒஷா அரைச்சதம் விளாசியதோடு 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை மகளிர் பந்துவீச்சில் அதன் தலைவி சாமரி அத்தபத்து 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகியாக அமீரக மகளிர் அணியின் எஷா ஒஷா தெரிவாகினார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அடுத்ததாக T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போடடியில் நாளை (07) ஸ்கொட்லாந்தை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 149/6 (20) விஷ்மி குணரட்ன 45(44), வைஷ்னவே மஹேஷ் 33/2
ஐக்கிய அரபு இராச்சியம் – 134/7 (20) எஷா ஓஷா 66(44), சாமரி அத்தபத்து 28/2
முடிவு – இலங்கை 15 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<