மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் தொடரில் இன்று (25) தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணியானது 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>பாகிஸ்தான் T20I அணியிலிருந்து வெளியேறிய ரிஸ்வான்<<
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் போட்டித் தொடர் இன்று (25) ஆரம்பமாகியது. தொடரின் முதல் போட்டியில் குழு A அணிகளான இலங்கை மற்றும் தாய்லாந்து என்பவை மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். அதன்படி போட்டியில் முதலில் ஆடிய இலங்கை வீராங்கனைகள் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை நிலக்ஷிக சில்வா பதிவு செய்தார். 20 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது இருந்த அவர் 3 பௌண்டரிகளோடு 29 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் தாய்லாந்து பந்துவீச்சில் சுனீடா, சுலீபோன் லாவோமி, ஒன்னிச்சா மற்றும் சனிடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 123 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தாய்லாந்து அணியானது 16.2 ஓவர்களில் ஆட்டமிழந்து வெறும் 55 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து
போட்டியில் தோல்வியினைத் தழுவியது. தாய்லாந்து தரப்பில் நன்னாபட் மாத்திரமே இரு இலக்க (18) ஓட்டங்களைப் பெற்றார்.
>>இலங்கை A அணியில் இடம்பிடித்த மொஹமட் சிராஸ்!<<
அதேநேரம் இலங்கை மகளிர் தரப்பின் பந்துவீச்சு சார்பில் இனோஷி பிரியதர்ஷினி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, உதேசிகா ப்ரோபதினி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சுருட்டி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.
போட்டியின் ஆட்டநாயகி விருது இலங்கை மகளிர் அணி வீராங்கனையான உதேசிகா ப்ரபோதினிக்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 122/5 (20) நிலக்ஷிகா சில்வா 29(20)*, சனிடா 15/1
தாய்லாந்து – 55 (16.2) நன்னாபட் 18, இனோஷி 14/3, உதேசிகா 10/2
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<