T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் சம்பியன்களான இலங்கை மகளிர்

175

2024ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்ற தகுதிகாண் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று (07) ஸ்கொட்லாந்து அணியை இலங்கை மகளிர் வீராங்கனைகள் 68 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரின் சம்பியன்களாக மாறியிருக்கின்றனர்.

ஆப்கான் A அணியுடனான கடைசிப் போட்டியிலும் இலங்கை தோல்வி

மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டி ஸ்கொட்லாந்து – இலங்கை மகளிர் அணிகள் இடையே நடைபெற்றது. தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் முறையே அமீரகம், ஸ்கொட்லாந்து ஆகியவற்றை வீழ்த்தி தெரிவாகியிருந்தன.

அபுதாபியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து வீராங்கனைகள் முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்ததோடு, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை மகளிர் துடுப்பாட்டம் சார்பில் சமரி அத்தபத்து தன்னுடைய இரண்டாவது T20I சதத்தோடு 63 பந்துகளில் 13 பெளண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் ரச்சேல் ஸ்லேட்டர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 101 ஓட்டங்கள் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை 30 ஓட்டங்களுடன் பிரியனாஷ் சட்டேர்ஜி பதிவு செய்தார்.

இலங்கை மகளிர் பந்துவீச்சில் உதேசிகா ப்ரோபாதினி 3 விக்கெட்டுக்களை சுருட்டினார். போட்டியின் ஆட்டநாயகியாக சமரி அத்தபத்து தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 169/5 (20) சமரி அத்தபத்து 102(63), ரச்செல் ஸ்லேட்டர் 35/2(4)

 

ஸ்கொட்லாந்து – 101/7 (20) பிரியனாஷ் சட்டர்ஜி 30(34), உதேசிகா ப்ரோபாதினி 13/3(4)

 

முடிவு – இலங்கை 68 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<