ஆசிய விளையாட்டு விழாவில், 7ஆம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் ஓமான் அணியிடம் 5-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியுற்றதன் மூலம், இலங்கை ஹொக்கி அணி 8ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு 30 வருடங்களின் பின்னர் ஒரு போட்டியிலும் 54 வருடங்களின் பின்னர் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி, சிறப்பான ஒரு தொடரை இன்றோடு முடித்துக்கொண்டது. ஹொங்கொங் மற்றும் இந்தோனேஷிய அணிகளுடனான போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி ஆசிய ஜாம்பவான்களான இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கொரிய அணிகளுடன் தோல்வியுற்று, தமது குழுவில் நான்காம் இடத்தை பிடித்தது.
அடுத்த குழுவில் நான்காம் இடத்தை பிடித்த ஓமான் அணியுடனான 7ஆம் இடத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. ஆசியாவில் 8ஆம் இடத்தில ஓமான் அணி காணப்படுவதோடு, இலங்கை 9ஆம் இடத்தில காணப்படுகிறது.
ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்
ஓமான் அணி போட்டி ஆரம்பித்து 5ஆவது நிமிடத்தில் மொகமட் நாசர் மூலமாக கோல் அடித்து போட்டியில் முன்னிலையை பெற்றது. எனினும் இலங்கையின் அனுபவமிக்க வீரரான சந்தருவன் பிரியலங்க இலங்கை அணி சார்பாக முதலாவது கோலை அடித்து புள்ளியை சமநிலை செய்தார்.
தொடர்ந்து சிறிது நேரத்திற்கு இரு அணிகளிம் சரிக்கு சமனாக திறமையை வெளிக்காட்டிய பொழுதும், 22ஆவது நிமிடத்தில் ஓமான் அணி வீரரான ரஷாத் சலீம் கோல் அடித்து மறுபடியும் தமது அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து காசிம் மூஸாவும் கோல் அடிக்க, ஓமான் முதல் பாதியில் 3 கோல்களைப் பெற்றுக்கொண்டது.
முதற் பாதி: இங்கை 1 – 3 ஓமான்
இரண்டாம் பாதியில் 39ஆவது நிமிடத்தில் ரஷாத் சலீம் தமது அணி சார்பாக இரண்டாவது கோலையும் அடித்து ஓமான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஓமான் அணி 5ஆவது கோலை மஹ்மூத் அஷூர் மூலமாக பெற்றுக்கொண்டது.
இறுதியாக இலங்கை அணி சார்பாக சுரேஷ் ரத்நாயக்க கோல் அடித்து இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்தார்.
1978ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு விழாவில் 7ஆவது இடத்தை இலங்கை பெற்றதன் பின்னர், இலங்கை அணி ஆசிய விளையாட்டு விழாவில் பெற்ற சிறந்த பெறுபேறு இதுவாகும். இலங்கை அணி இம்முறை 8ஆவது இடத்தை பிடித்து இலங்கை ஹொக்கி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<