இலங்கை- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி களத்தடுப்பை தீர்மானம் செய்தது. அதன்படி இலங்கை அணியின் குசால் பெரேரா, தனுஷ்கா குணதிலக ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலக 9 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பெரேரா 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்
3ஆவது விக்கெட்டுக்கு குசல் மெண்டிஸ் உடன் சந்திமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைச்சதம் அடித்தனர். மெண்டிஸ் 51 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
சந்திமால் ஒரு புறம் நிலைத்து நின்று விளையாட அடுத்து வந்த தலைவர் மெதிவ்ஸ் 53 பந்துகளில் 49 ஓட்டங்களையும் அறிமுக வீரர் தசுன் ஷானக 19 பந்துகளில் 42 ஓட்டங்களையும் குவித்து ஆட்டம் இழந்தனர். சந்திமால் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் 3 ஓட்டங்களை எடுத்து சதம் அடித்தார். இவரது சதத்தால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 303 ஓட்டங்களைக் குவித்தது.
பின் 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது மழை பெய்தமையால் 47 ஓவர்களில் 293 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவர்களால் 40.4 ஓவர்களில் 216 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. அந்த அணி சார்பாக வில்லியம் போர்ட்டர்கெபீல்ட் 73 ஓட்டங்களையும் வின் ஓப்ரயின் 64 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் தசுன் ஷானக 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்