தொடரை தக்கவைத்துக் கொண்ட இலங்கை அணி

269

இந்தியாவுக்கு எதிரான உடல் அங்க குறைபாடு உள்ளோர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டி-20 போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 1-1 என தக்கவைத்துக் கொண்டது.

கொழும்பு BRC மைதானத்தில் நேற்று (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் அணித் தலைவர் பீ.ஜீ. கயான் துரதிஷ்டமாக தனது இன்னிங்ஸை பாதியில் இடைநிறுத்திக்கொண்டபோதும் அணிக்கு வெற்றியை தேடித்தர உதார இந்திரஜித் மற்றும் ஆர்.எம். குமார ஆகியோரால் முடிந்தது.

குமார துடுப்பாட்டத்தில் மாத்திரமன்றி, பந்துவீச்சிலும் சோபித்து போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

போராடி வெற்றியை தவறவிட்ட இலங்கை உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணி

இதன் போது இந்திய அணி தனது முதல் விக்கெட்டை ஆரம்ப ஓவரிலேயே பறிகொடுத்தபோதும் பால்ராஜ் மற்றும் சுவ்ரோ பெற்ற 52 ஓட்ட இணைப்பாட்டம் அணியை சரிவில் இருந்து மீட்க உதவியது. மீண்டும் ஒருமுறை சிறப்பாக துடுப்பாடிய பால்ராஜ் 20 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றார். சுவ்ரோ அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை பெற்றார்.        

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. எனினும் பின்னர் இணைந்த பீ.ஜி. கயான் மற்றும் நிலங்க பெர்னாண்டோ உறுதியாக ஆடி போட்டியை இலங்கை அணிக்கு சாதகமாக்கினர்.

இலங்கை சார்பில் அதிகபட்சம் 44 ஓட்டங்களை பெற்ற கயான் இலங்கை அணிக்கு வெற்றிக்காக மேலும் 75 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் அரங்கை விட்டு வெளியேறினார்.

உதார இந்திரஜித் மற்றும் குமார பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 53 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் இலங்கை உடல் அங்க குறைபாடு உள்ளோர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 166 ஓட்டங்களை எட்டியது.

இதன் போது இலங்கை அணி 5 பந்துகள் மீதம் இருக்கும்போதே வெற்றி இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.   

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 165/5 (20) – பால்ராஜ் 41, சுவ்ரோ 61*, ஷீல் 22, ஆர்.எம்.என். குமார 2/19

இலங்கை – 166/5 (19.1) – நிலங்க பெர்னாண்டோ 22, பீ.ஜி. கயான் 44, உதார இந்திரஜித் 26*, ஜே.எம்.ஆர். உடுகம 29*, ரவீந்திர போல் 1/22    

முடிவு – இலங்கை உடல் அங்க குறைபாடு உள்ளோர் 5 விக்கெட்டுகளால் வெற்றி