இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இடையிலான 2ஆவது நான்கு நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 3ஆம் திகதி நோர்த்ஹாம்டனில் ஆரம்பமாகியது. முதல் நாளான ஆகஸ்ட் 3ஆம் திகதி இங்கிலாந்து இளைஞர் அணி லஹிரு குமராவிடம் 208 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆட்ட நேர முடிவின் பொழுது முதல் இனிங்க்ஸைத் துடுப்பெடுத்தாடும் இலங்கை இளைஞர் அணி 48 ஓட்டங்களைப் பெற்று 1 விக்கட்டை இழந்து காணப்படுகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து இளைஞர் அணி சார்பாக ஆரம்ப துடுப்ப்பாட்ட ஜோடியான வெஸ்ட்பரி மற்றும் ஹோல்டன் முதல் விக்கட்டுக்காக 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர். 31 ஓவர்கள் கடந்த நிலையில் வெஸ்ட்பரியின் விக்கட்டை இலங்கையின் இன்றைய நாயகன் லஹிரு குமார கைப்பற்றினார். 125 பந்துகளில் 45 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் வெஸ்ட்பரி ஆட்டமிழந்தார்.
முதல் விக்கற்றை கைப்பற்றிய பின் லஹிரு குமார தனது அற்புத பந்து வீச்சால் மேலும் 4 விக்கற்றுகளை இங்கிலாந்து அணி 102 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் கைப்பற்றினார்.
91 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை மட்டும் இழந்து பலமான நிலையில் இங்கிலாந்து இளைஞர் அணி காணப்படும் பொழுது, இன்றைய போட்டியின் நாயகன் லஹிரு குமார இலங்கை இளைஞர் அணிக்கு நம்ப முடியாத முன்னிலையைக் கொடுத்தார். ஹன்கின்ஸ், டெல்,போப் ஆகியோரை எந்த ஒரு ஓட்டமும் பெறாத நிலையிலும், பார்ட்லெட் வெறும் 1 ஓட்டத்தைப் பெற்ற நிலையிலும் லஹிரு குமாராவின் பந்து வீச்சிற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
3 வீரர்களை ஓட்டங்களை பெற முன்னரே ஆட்டமிழக்க செய்து 102 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகள் என்ற நிலைமைக்கு இங்கிலாந்து இளைஞர் அணியை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார் லஹிரு குமார.
தொடர்ந்து பந்து வீசிய சில்வாவும், மெக்கோய் என்ற வீரரை ஓட்டங்கள் பெற முன்னரே ஆட்டமிழக்க செய்ய இங்கிலாந்து 107 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்தது. லஹிரு குமார பார்ன்ஸையும் 16 ஓட்டங்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்ற, பிரசானின் பந்து வீச்சிற்கு பியர்டும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மறு முனையில் நிதானமாகவும், சிறப்பாகவும் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹால்டன் தனி ஒருவனாக இங்கிலாந்து இளைஞர் அணியைத் தாங்கி பிடித்து 100 ஓட்டங்களைக் கடந்து சதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதி விக்கட்டுக்காக விர்டியுடன் கைகோர்த்த ஹோல்டன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணி 200 ஓட்டங்களைத் தாண்ட உதவினார். விர்டி 16 ஓட்டங்களுடன் லஹிரு குமாரவின் பந்து வீச்சிற்கு ஆட்டமிழக்க, ஹோல்டன் ஆட்டமிழக்காமல் 318 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பெற்றுக் காணப்பட்டார்.
ஆரம்பத்தில் இலங்கை இளைஞர் அணி பின்னிலையில் இருந்த பொழுதும், லஹிரு குமராவிடம் தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து இளைஞர் அணி சுருண்டது. 7விக்கட்டுகளைக் கைப்பற்றி லஹிரு குமார இன்றைய நாளின் ஆட்ட நாயகனாக வலம் வந்தார்.
தொடர்ந்து தனது முதல் இனிங்ஸைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பாக ஜயலத் மற்றும் பெர்னான்டோ ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். வெகு நேரம் தாக்குப் பிடிக்கத் தவறிய ஜயலத், இலங்கை இளைஞர் அணி 13 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 9 ஓட்டங்களைப் பெற்று பனாயியின் பந்து வீச்சிற்கு விக்கட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய தலைவர் அசலங்க, பெர்ணான்டோவுடன் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். முதல் நாள் முடிவின் பொழுது பெர்னாண்டோ 10 ஓட்டங்களுடனும், அசலங்க 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர். இலங்கை இளைஞர் அணி 48 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டைறை இழந்து முதல் நாள் முடிவில் காணப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி : 208(82.2) – ஹோல்டன் 111*, வெஸ்ட்பரி 45, லஹிரு குமார 7/82
இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி : 48/1(11) – அசலங்க 20*, பெர்னாண்டோ 10*, பனாயி 1/13