இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் 2ஆவது நாள் ஆட்டம் நேற்று ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் தொடர்ந்தது. முதல் நாளில் மெதிவ்ஸின் அழைப்புக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 171/5 என்ற நிலையில் இருக்கும் போது முதல்நாள் முடிவுற்றது.
இதன் பின் நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. அதன் பின் துஸ்மந்த சமீரவின் சிறந்த பிடியெடிப்பின் மூலம் இங்கிலாந்து அணி, சிறப்பாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ்ஸின் விக்கட்டை இழந்தது. மிகவும் நிதனாமாக விளையாடிய ஹேல்ஸ் 86 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் நேர்த்தியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ தனது டெஸ்ட் வாழ்வில் 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இவரின் சதத்தின் மூலம் இங்கிலாந்து அணி இறுதியில் 298 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. ஜொனி பெயார்ஸ்டோ 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 140 ஓட்டங்களை அதிக பட்சமாகப் பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில் டசுன் ஷானக, துஸ்மந்த சமீரா ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும் ரங்கன ஹேரத் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை
பின் இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் விளையாட களம் புகுந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் கவ்ஷால் சில்வா ஜோடி ஆரம்பம் முதல் இங்கிலாந்து அணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் ஜேம்ஸ் என்டர்சனின் பந்துகளை முகங்கொடுக்க சிரமப்பட்டனர்.
பந்தை ஒழுங்காக மட்டையில் படவைக்க முயன்ற திமுத் கருணாரத்ன ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ப்ரோட் வீசிய பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கட்டைத் தொடர்ந்து “பொறுமை மன்னன் ” கவ்ஷால் சில்வா மெதுவாக விளையாடி ஓட்டங்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எண்டர்சன் வீசிய பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணிக்கு 3ஆம் இலக்கத்தில் சிறப்பாக விளையாடிய குசல் மென்டிஸும் தான் சந்தித்த 2ஆவது பந்திலேயே, ப்ரோட் வீசிய பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை அணி 12 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து திணறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த தலைவர் மெதிவ்ஸ் மற்றும் உபதலைவர் சந்திமல் ஜோடி பந்து மட்டைக்கு வரும் வரை பொறுமையாக நின்று அவதானமாக விளையாடினார்கள். ஆனால் சந்திமலால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர் 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். பின் ஜோடி சேர்ந்த திரிமன்ன மெதிவ்ஸோடு இணைந்து இலங்கை அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சியும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. மெதிவ்ஸ் 34 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அவரது விக்கட்டைத் தொடர்ந்து இலங்கை அணியின் விக்கட்டுகள் வேகமாகச் சரிந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயறிசிப் போட்டியில் சதம் பெற்ற தசுன் ஷானக முதல் பந்திலேயே ஓட்டங்கள் எதுவும் பெறமால் வெளியேறி பெரும் ஏமாற்றம் அளித்தார்.
பின் இறுதில் அனைவராலும் நம்பப்பட்டு குறைந்த பட்சம் Follow on முறையை தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட திரிமன்ன அதிஷ்டமற்ற முறையில் பிடிகொடுத்து 22 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். இறுதியில் இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆரம்பம் முதல் இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்களை திணறச் செய்த ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கட்டுகளையும் ஸ்டுவர்ட் ப்ரொட் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
தசுன் ஷானகவிற்கு கனவு டெஸ்ட் அறிமுகம்
பின் 207 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி Follow on முறையில் தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. இலங்கை அணியின் 2ஆவது இனிங்சில் 2 பந்துகள் போடப்பட்ட நிலையில் போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தமையால் 2அவது நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது இலங்கை அணி விக்கட் இழப்பின்றி 1 ஓட்டத்தைப் பெற்று இருந்தது. போட்டியின் 3ஆவது நாள் இன்றாகும்.
பாரிய ஒரு பொறுப்பை சுமந்த நிலையில் இன்றைய 3ஆவது நாளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இங்கிலாந்தில் இப்பருவகாலம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமானது. இதனால் இலங்கை அணி மிக அவதானமாகவும் பந்து மட்டைக்கு அருகில் வரும் வரை பொறுமையாக நின்று விக்கட்டுகளை இழக்காமல் நீண்ட இணைப்பாட்டங்களை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது.
போட்டியின் சுருக்கம்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் எஞ்சலொ மெதிவ்ஸ் முதலில் இங்கிலாந்து அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
இங்கிலாந்து அணி முதல் இனிங்சில் 297/10
- பெயார்ஸ்டோ 140
- அலெக்ஸ் ஹேல்ஸ் 86
- தசுன் ஷானக 46/3
- துஸ்மந்த சமீர 64/3
- ரங்கன ஹேரத் 25/2
இலங்கை முதல் இனிங்சில் 91/10
- எஞ்சலொ மெதிவ்ஸ் 34
- லஹிறு திரிமன்ன 22
- டினேஷ் சந்திமல் 22
- ஜேம்ஸ் எண்டர்சன் 16/5
- ஸ்டுவர்ட் ப்ரொட் 11/4
2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி விக்கட் இழப்பின்றி 1 ஓட்டத்தைப் பெற்று இருந்தது. இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி 10 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க இன்னும் 206 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.