வோர்ன் – முரளி கிண்ணம் இலங்கைக்கு

310
SL vs Aus Day 3

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இனிங்ஸில் 281 ஓட்டங்கள் குவித்து சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பின்னர் அவுஸ்திரேலியா 1-வது இனிங்ஸைத் தொடங்கியது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 106 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் 2-வது இனிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களைக் குவித்தது.

இதனால் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 25 ஓட்டங்கள் எடுத்திருந்தது. வோர்னர் 22 ஓட்டங்களுடனும், ஸ்மித் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இலங்கையின் சுழற்பந்து வீச்சை அவுஸ்திரேலியா வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வோர்னர் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தில்ருவான் பெரேராவின் பந்தில் ஆட்டம் இழந்தார். ஸ்மித் 30 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த வோக்ஸ் 28 ஓட்டங்களுடனும், மார்ஷ் 18 ஓட்டங்களுடனும், நெவில் 24 ஓட்டங்களுடனும், ஸ்டார்க் 26 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியா 183 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே, பல்லேகலேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்ததால், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. 3-வது மற்றும் கடைசிப் போட்டி 13ஆம் திகதி கொழும்பில் தொடங்குகிறது.

2-வது இனிங்ஸில் 64 ஓட்டங்களையும், போட்டியில் 10 விக்கட்டுகளையும் வீழ்த்திய தில்ருவான் பெரேரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை 281/10 – குசல் மெண்டிஸ் 86, எஞ்சலோ மெதிவ்ஸ் 54, குசல் பெரேரா 49, தனன்ஜய  டி சில்வா 37, மிச்சல் ஸ்டார்க் 44/5, நேதன் லயன் 78/2

அவுஸ்திரேலியா 106 – டேவிட் வோர்னர் 42, மிச்சல் மார்ஷ் 25, உஸ்மான் கவாஜா 11, ரங்கன ஹேரத் 35/4, டில்ருவான் பெரேரா 29/4

இலங்கை 237/10 – டில்ருவான் பெரேரா 64, எஞ்சலோ மெதிவ்ஸ் 47, குசல் பெரேரா 35, தனன்ஜய  டி சில்வா 34, மிச்சல் ஸ்டார்க் 50/6, நேதன் லயன் 80/2

அவுஸ்ரேலியா 183/10 –  டேவிட் வோர்னர் 41, ஸ்டீவ் ஸ்மித் 30, எடம் வோகஸ் 28, டில்ருவான் பெரேரா 70/6, ரங்கன ஹேரத் 74/2

இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்