3ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

814
England vs Sri Lanka - Day 5 - 3rd Test report
Generated by IJG JPEG Library

இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நிறைவுக்கு வந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 128.4 ஓவர்களில் 416 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் அதிஷ்டத்துடன் ஆடிய பேர்ஸ்டோவ் 167 ஓட்டங்களையும், எலஸ்டயர் குக் 85 ஓட்டங்களையும், க்றிஸ் வோக்ஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் நான்கு விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களான லக்மால் 3 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 95.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் கௌஷால் சில்வா 79 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 42 ஓட்டங்களையும் , ரங்கன ஹேரத் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஹேரத்தை சீண்டிய என்டர்சனுக்கு ஐ.சி.சி. கண்டிப்பு

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டீபன் பின் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும், ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள். இதன்பின் 128 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்க இங்கிலாந்து அணி தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. முதல் விக்கட்டுக்காக 45 ஓட்டங்கள் பகிரப்பட்டன. பின் அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 41 ஓட்டங்களோடும் ஸ்டீபன் பின் 6 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின் நேற்று தமது இனிங்ஸைத் தொடர்ந்தது இங்கிலாந்து அணி. ஆரம்பத்திலேயே ஸ்டீபன் பின் 7 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் அலெக்ஸ்ஹேல்ஸோடு ஜோடி சேர்ந்த எலஸ்டயர் குக் சிறந்த இணைப்பாட்டதைப் பெற்றுக்கொடுத்தார்கள். ஆனால் இந்த இணைப்பாட்டத்தின் போது அலெக்ஸ் ஹேல்ஸ் நுவான் பிரதீப் வீசிய பந்தில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

ஆனால் நடுவராக இருந்த ரொட் டக்கர் அது “நோ போல்” பந்து எனக் கூறினார். ஆனால் நுவான் பிரதீப்பின் கால் பாதத்தின் சிறுபகுதி கோட்டிற்குப் பின்னால்இருந்தமையால் அதை “நோ போல்” பந்தாகக் கணிக்க முடியாது. ஆயினும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டம் இழப்பில் இருந்து தப்பினார். பின் அவர் 94 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் இழப்பிற்கு 233 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இங்கிலாந்து அணி சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸைத் தவிர எலஸ்டயர் குக் ஆட்டம் இழக்காமல் 49 ஓட்டங்களையும், ஜொனி பெயார்ஸ்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

2ஆவது இனிங்ஸில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாமிந்த எரங்க மற்றும் நுவான் பிரதீப்வி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த எஞ்சலொ மெதிவ்ஸ் 1 விக்கட்டை வீழ்த்தினார்.

இறுதிநாளில் இலங்கை அணி வெற்றிபெற 330 ஓட்டங்கள் தேவை

பின்பு இலங்கை அணிக்கு 362 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌஷால் சில்வா 12 ஓட்டங்களோடும் திமுத் கருணாரத்ன 19 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். போட்டியின் கடைசி நாளான இன்று இலங்கை அணிக்கு வெற்றி பெற 10 விக்கட்டுகளும் கையிருப்பில் இருக்க இன்னும் 330 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் 4ஆவது நாள் ஆட்டத்தைப் போன்றே 5ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இடைக்கிடையே கடுமையாக மழைபெய்ததால் இறுதியில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

போட்டி முடிவுக்கு கொண்டு வரும் போது இலங்கை அணி 1 விக்கட் இழப்பிற்கு 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரத்ன 19 ஓட்டங்களோடும் குசல் மென்டிஸ் 17 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கௌஷால் சில்வா 16 ஓட்டங்களை பெற்று இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

3ஆவது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாக ஜொனி பெயார்ஸ்டோ தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக ஜொனி பெயார்ஸ்டோவோடு இலங்கை அணியின் கௌஷால் சில்வாவும் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதியில் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-0 என்ற அடிப்படையில் வென்றது. இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 1ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் இலங்கை அணி அயர்லாந்து அணியுடன் எதிர்வரும் 16 மற்றும் 18ஆம் திகதிகளில் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தத் தொடரை, அனுபவமில்லாத இலங்கை அணி இழந்தாலும் இந்த தொடரின் மூலம் ஒருநாள் போட்டிகளில் எவ்வாறு இங்கிலாந்து சூழ்நிலைகளை சமாளித்து விளையாடுவது என்பதை இலங்கை அணி வீரர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Highlights - England v Sri Lanka at Lord's Day 5