இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் எஞ்சலொ மெதிவ்ஸ் முதலில் இங்கிலாந்து அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
1வது டெஸ்ட்டில் விளையாடும் அணி விபரம்
இலங்கை அணி
எஞ்சலொ மெதிவ்ஸ் (தலைவர்), திமுத் கருணாரத்ன, கவ்ஷால் சில்வா, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமல், லஹிறு திரிமன்ன, தசுன் ஷானாக, ரங்கன ஹேரத், துஸ்மந்த சமீர, ஷாமிந்த எறங்க, நுவான் பிரதீப்
இங்கிலாந்து அணி
எலஸ்டயர் குக் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், நிக் கொம்ப்டன், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, மொயின் அலி, ஸ்டுவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் என்டர்சன், ஸ்டீவன் பின்
டெஸ்ட் அறிமுக வீரர்கள் : தசுன் ஷானாக (இலங்கை), ஜேம்ஸ் வின்ஸ் (இங்கிலாந்து)
போட்டி நடுவர்கள் : அலீம் டார், ரொட் டக்கர்
மெதிவ்ஸின் அழைப்புக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 5 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்பத்தில் களமிறங்கிய குக் மற்றும் ஹேல்ஸ் ஜோடி முதல் விக்கட்டுக்காக இங்கிலாந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 49 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குக் தசுன் ஷானகவின் பந்துவீச்சில் விக்கட் காப்பாளர் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். அதன் பின் தொடர்ந்து வந்த கொம்ப்டன் மற்றும் ரூட் ஆகியோரின் விக்கட்டை இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான தசுன் ஷானக கைப்பற்ற இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் முதல் நாள் பகல் போசனை இடைவேளைக்குச் செல்லும் பொது இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பகல் போசன இடைவேளையின் பின் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ஓட்டங்களைப் பெற முயன்றாலும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சால் விக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதற்கமைய இங்கிலாந்து அணி ஒரு நிலையில் 5 விக்கட் இழப்பிற்கு 83 ஓட்டங்களைப் பெற்று பெரும் நெருக்கடியில் இருந்தது. ஆனால் அதற்கு பின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலேக்ஸ் ஹேல்ஸ் பொறுப்பாக விளையாடி ஜொனி பெயார்ஸ்டோவோடு இணைந்து ஓட்டங்களைப் பெற்றார். இந்த ஜோடி தேநீர் இடைவேளை வரை அவதானமாக விளையாடியது. தேநீர் இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும் போது இங்கிலாந்து அணி 5 விக்கட் இழப்பிற்கு 171 ஓட்டங்களைப் பெற்றது. அப்போது ஆடுகளத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 71 ஓட்டங்களோடும், ஜொனி பெயார்ஸ்டோ 54 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் ஆடுகளத்தில் இருந்தனர். இந்த ஜோடி 5ஆவது விக்கட்டுக்காக வீழ்த்தப்படாத 88 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்தது.
இதன் பின் தேநீர் இடைவேளையின் பின் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. சுமார் 1 1/2 மணித்தியாலமாக போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் இறுதியில் முதல் நாள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்