P.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று, பங்களாதேஷின் சிறந்த பந்து வீச்சு காரணமாக இலங்கை அணிக்கு எதிரணியைவிட 139 ஓட்டங்களால் மாத்திரமே முன்னிலை பெற முடிந்துள்ளது.
போட்டியின் மூன்றாம் நாளான நேற்று, பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி தமது முதல் இன்னிங்சினை முடித்துக்கொண்டிருந்ததுடன், பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி நல்ல ஆரம்பத்துடன், விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களை தமது இரண்டாம் இன்னிங்சுற்காக பெற்றிருந்தது.
போட்டியின் நான்காம் நாளான இன்று தாம் பங்களாதேஷின் முதலாம் இன்னிங்சின் காரணமாக பின்தங்கியிருந்த 75 ஓட்டங்களினை தாண்டி சவாலான வெற்றி இலக்கொன்றினை வைக்கும் நோக்கத்துடன், களத்தில் நின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க (25) மற்றும் திமுத் கருணாரத்ன (25) ஆகியோர் ஒரு சிறப்பான நாளினை எதிர் நோக்கிய வண்ணம் போட்டியினை ஆரம்பித்தனர்.
எனினும், இன்றைய நாளில் வீசப்பட்ட இரண்டாவது ஓவரில் துல்லியமான சுழல் பந்துவீச்சின் மூலம் உபுல் தரங்கவை மெஹதி ஹஸன் போல்ட் செய்து அதிரடி ஆரம்பத்தினை பங்களாதேஷ் அணிக்குப் பெற்றுத்தந்தார்.
இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பறிபோன, உபுல் தரங்க இன்றைய நாளில் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் குவித்து மொத்தமாக 26 ஓட்டங்களுடன் ஓய்வறையை நோக்கி சென்றார்.
இதனையடுத்து களம் நுழைந்த குசல் மெண்டிஸ், கருணாரத்னவுடன் கைகோர்த்து பங்களாதேஷின் பந்துகளை தடுத்தாடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையின் மந்த கதியில் கட்டியெழுப்பியதுடன், போட்டியின் மதிய போசண இடைவேளை வரை இருவரும் ஆட்டமிழக்காது பங்களாதேஷ் அணி முதலாம் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருந்த ஓட்டங்களையும் (129) தாண்டினர்.
மதிய போசண இடைவேளைக்குப்பின், பங்களாதேஷிற்கு வெற்றி இலக்கு ஒன்றினை வைக்க களம் நுழைந்த குசல் மெண்டிஸ், பங்களாதேஷின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் மூலம் விக்கெட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீமிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார்.
குசல் மெண்டிஸ் இரண்டாம் விக்கெட்டிற்காக வலுவான இணைப்பாட்டம் (86) ஒன்றினை அரைச்சதம் கடந்து நின்ற திமுத் கருணாரத்னவுடன் சேர்ந்து வழங்கியதோடு 91 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களினை குவித்திருந்தார்.
மூன்றாம் நடுவர் வரை சென்ற மெண்டிசின் ஆட்டமிழப்பு போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது.
இதனையடுத்து முதலாம் இன்னிங்சில் சதமடித்த சந்திமால் களம் நுழைந்து இலங்கை அணி, 160 ஓட்டங்களினை கடந்திருந்த வேளையில் மீண்டும் பந்து வீசிய முஸ்தபிசுர் ரஹ்மானினால், அணித்தலைவர் ரஹீமிடம் திரும்பவும் பிடிகொடுத்து வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
திமுத் கருணாரத்ன களத்தில் நிற்க, தொடர்ந்து ஆடுகளம் விரைந்த துடுப்பாட்ட வீரர்களான அசேல குணரத்தன (7), தனன்ஞய டி சில்வா (0), நிரோஷன் திக்வெல்ல (5) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் மூலம் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி, போட்டியின் தேநீர் இடைவேளைக்குள் மொத்தமாக, 62 ஓட்டங்களினை மாத்திரம் கொடுத்து இலங்கையின் முக்கியமான 5 விக்கெட்டுகளை சாய்த்து இன்றைய நாளிற்குரிய முழு ஆதிக்கத்தையும் தன்னதகத்தே எடுத்துக்கொண்டது.
தேநீர் இடைவேளைக்கு முன்பாக பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களினை சமாளித்து ஆடியிருந்த திமுத் கருணாரத்ன தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்து இலங்கை அணியின் ஓட்டக்குவிப்பில் பெரும் பங்கிற்கு சொந்தக்காரராகி இருந்தார்.
பின்னர், களத்ததிற்கு வந்த தில்ருவான் பெரேரா உடன் கூட்டுச்சேர்ந்த கருணாரத்தன போட்டியின் மூன்றாம் இடைவெளியில் எடுக்கப்பட்ட புதிய பந்தில் செளம்யா சர்க்கர் எடுத்த கச்சிதமான பிடியெடுப்பு மூலம் சகீப் அல் ஹஸனினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.
இதனால், தென்னாபிரிக்க அணியுடனான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இலங்கை சார்பாக அரைச்சதம் எட்டியிருந்த ஒரே வீரரான திமுத், இப்போட்டியில் நீண்ட நேர போராட்டம் ஒன்றை வெளிப்படுத்தி 244 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 126 ஓட்டங்களினை குவித்து தனது துடுப்பாட்டத்தினை முடித்துக்கொண்டார்.
பின்னர், பங்களாதேஷ் அணியின் பந்துகளை தடுத்தாடிய தில்ருவான் பெரேரா உடன் சேர்ந்த இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் இலங்கையின் மத்திய வரிசை வீரர்களை விட அதிகமாக ஓட்டங்களை (9) பெற்று ஆட்டமிழந்தார்.
முடிவில், தில்ருவான் பெரேராவின் சிறந்த தடுப்பாட்டத்துடன் இன்றைய நாள் நிறைவில் இலங்கை அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 100 ஓவர்களிற்கு 268 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
களத்தில் தில்ருவான் பெரேரா 26 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 16 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.
மொசதிக் ஹொசைன் வீசிய இன்றைய நாளின் இறுதிப்பந்தில் பங்களாதேஷ் அணி விக்கெட் ஒன்றிற்கான (லக்மால்) முறைப்பாடொன்றினை மூன்றாம் நடுவரிற்குச் செய்திருந்தும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியினை வீழ்த்தாத பங்களாதேஷ் அணி, தாம் விளையாடும் நூறாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் அதிசிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டி இலங்கை அணியை வெல்லும் சந்தர்ப்பம் ஒன்றினைப் பெற்றுள்ளது.
இன்றைய நாளில், பங்களாதேஷ் அணி சார்பாக சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.