இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நிறைவின் போது பங்களாதேஷை குறைவான ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வீரர்கள் எதிரணியை விட 312 ஓட்டங்களால் முன்னிலையும் பெற்றிருக்கின்றனர்.
[rev_slider LOLC]
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற இந்த ஆட்டம் நேற்று (08) டாக்காவில் ஆரம்பமாகியிருந்தது.
முதல் நாளில் போட்டியில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் காணப்பட்டிருந்த காரணத்தினால் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தது. அதாவது, முதல் இன்னிங்சில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி 222 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்ததுடன், இதன் பின்னர் மைதான சொந்தக்காரர்களான பங்களாதேஷ் அணியினர் அவர்களின் முதல் இன்னிங்சில் துடுப்பாடி 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலை ஒன்றை ஆட்ட நேர முடிவில் அடைந்திருந்தனர். களத்தில் லிடன் தாஸ் 24 ஓட்டங்களுடனும், மெஹிதி ஹசன் 5 ஓட்டங்களுடனும் நின்றிருந்தார்கள்.
சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரினால் இலங்கைக்கு 100 கோடி ரூபா வருமானம்
166 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இப்போட்டியில் தம்முடைய முதல் இன்னிங்சைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணிக்கு இரண்டாம் நாளின் முதல் விக்கெட்டைக் கைப்பற்றி சுரங்க லக்மால் மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். லக்மாலினால் பங்களாதேஷ் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் லிடன் தாஸ் போல்ட் செய்யப்பட்டு 25 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
எனினும், ஐந்தாம் விக்கெட்டுக்காக மெஹிதி ஹசனுடன் இணைந்து கொண்ட அணித் தலைவர் மஹ்மதுல்லா தனது தரப்பின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை நூறைத் தாண்ட வைத்திருந்தார். இந்த நிலையில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் பந்துவீசத் தொடங்கியிருந்த அகில தனஞ்சய தன்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்டாக மஹ்மதுல்லாவை போல்ட் செய்தார். இதனால் பங்களாதேஷ் அணியின் தலைவர் 17 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியதோடு, பங்களாதேஷுக்கு நம்பிக்கை தரத் தொடங்கியிருந்த மெஹிதி ஹசன் – மஹ்மதுல்லா ஜோடி இணைப்பாட்டமும் 34 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.
மஹ்மதுல்லாவின் விக்கெட்டைத் தொடர்ந்து அதே ஓவரில் சபீர் ரஹ்மானின் விக்கெட்டையும் ஓட்டமெதுவுமின்றி தனஞ்சய கைப்பற்றினார். தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களையும் அபாரமான பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய இலங்கை அணி ஆட்டமிழக்கச் செய்ய முடிவில், 45.4 ஓவர்களில் 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் மதிய போசண இடைவேளைக்கு முன்பாகவே பறிகொடுத்திருந்தது.
இறுதி 5 விக்கெட்டுக்களையும் வெறும் 3 ஓட்டங்களுக்கு பறிகொடுத்திருந்த பங்களாதேஷ் அணியில், பொறுப்பான முறையில் ஆடியிருந்த ஓரே வீரரான மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும், தில்ருவான் பெரேரா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
இதனையடுத்து 112 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 9 ஓட்டங்களுடன் வெற்றிகரமாக மதிய போசணத்தை எடுத்துக் கொண்டது.
மதிய போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்தது. முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரே அந்த மூன்று விக்கெட்டுக்களாக காணப்பட்டிருந்தனர். இதில் தனஞ்சய டி சில்வா மாத்திரம் 20 ஓட்டங்களைக் கடந்திருந்தார்.
எனினும், தேநீர் இடைவேளை வரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்ன மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதனால், இன்றைய நாளின் தேநீர் இடைவேளையில் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு கிட்டவான முன்னிலையுடன் காணப்பட்டிருந்தது.
மீண்டும் இவ்வருடம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் T-20
இன்றைய நாளுக்கான போட்டியின் இறுதி இரண்டு மணி நேரங்களில் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்டினர். இதனால் தேநீர் இடைவேளையை அடுத்து முதல் விக்கெட்டாக திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். கருணாரத்வை அடுத்து தினேஷ் சந்திமாலின் (30) விக்கெட்டும் வீழ்ந்தது. தொடர்ந்து இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்களில் ரொஷேன் சில்வா தவிர்ந்த அனைவரும் மோசமான துடுப்பாட்டம் ஒன்றை வெளிக்காட்டியிருந்தனர்.
ரொஷேன் சில்வா போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி பெற்றுக் கொண்ட அரைச் சதத்துடன், 300 ஓட்டங்களுக்கு மேல் பங்களாதேஷ் அணியை விட முன்னிலை அடைந்து கொண்ட இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், 62 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து இரண்டாம் இன்னிங்சில் காணப்படுகின்றது.
இப்போட்டியின் மூலம் தொடர்ச்சியாக தனது இறுதி நான்கு டெஸ்ட் இன்னிங்சுகளிலும் 50 இற்கு மேலான ஓட்டங்களை பெற்றிருக்கும் ரொஷேன் சில்வா 58 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
பங்களாதேஷ் அணியின் சார்பில் பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும், தய்ஜூல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
ஸ்கோர் விபரம்