சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை அணி துடுப்பாட்ட ஆதிக்கத்துடன் பங்களாதேஷ் அணியைவிட 361 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
மெண்டிஸ், குணரத்னவின் பலமான அத்திவாரத்துடன் இலங்கை வலுவான நிலையில்
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளளுக்கு இடையிலான முதல்…
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் இரண்டாம் நாளில், 4 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்ட, இலங்கை அணி களத்தில் ஆட்டமிழக்காது நின்றிருந்த குசல் மெண்டிஸ் (166) மற்றும் நிரோஷன் திக்வெல்ல (14) ஆகியோருடன் தமது முதல் இன்னிங்சினை இன்று தொடர்ந்தது.
இலங்கை அணிக்கு விக்கெட் காப்பாளராய் செயற்படும் இடது கை துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல, களத்தில் நின்ற குசல் மெண்டிசுடன் கை கோர்த்து ஐந்தாவது விக்கெட்டுக்காக வலுவான இணைப்பாட்டம் (110) ஒன்றினை பகிர்ந்தார்.
நேற்றைய நாளில் சுபாஷிஸ் ரோய் வீசிய, தனது முதல் பந்தில் பிடிகொடுத்த மெண்டிஸ் அது செல்லாப்பந்து (No Ball) என நடுவர் அறிவிக்க தப்பிக்கொண்டதோடு, இன்றைய நாளிலும் அதே பந்து வீச்சாளர் வீசிய பந்து ஒன்றினை ஓங்கி அடித்து பிடிகொடுத்து இருந்தார். எனினும், பந்தினை பிடித்த ரஹ்மான் பந்துடன் எல்லைக்கோட்டினை தொட்டதன் காரணமாக, அந்த பிடியெடுப்பு சிக்ஸர் ஆக மாறியது. இரண்டு ஆட்டமிழப்பு வாய்ப்புகளிலும் இருந்து அதிர்ஷ்டம் மூலம் தப்பிக் கொண்ட குசல் மெண்டிஸ், தனது இரட்டை சதத்தினை பெற முயன்ற வேளையில், மெஹதி ஹஸனின் சுழல் பந்து வீச்சில் சிக்கி ஆட்டமிழந்தார்.
ஆட்டமிழக்கும் போது, 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 285 பந்துகளை சந்தித்து 194 ஓட்டங்களினைப் பெற்றிருந்த குசல் மெண்டிஸ் டெஸ்ட் போட்டியில் தான் ஒரு இன்னிங்சில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களினை இதன் மூலம் பதிவு செய்ததோடு, அணியின் ஓட்ட எண்ணிக்கையினை 400 ஆக உயர்த்துவதற்கு துணை புரிந்தார்.
இவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து, நிரோஷன் திக்வெல்ல சிறப்பான அரைச்சதம் ஒன்றினை விளாசி மதிய போசண இடைவேளைக்கு முன்னதாக 75 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆட்டமிழந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பின்வரிசையில் களமிறங்கிய அனுபவம் மிக்க சகலதுறை ஆட்டக்காரரான தில்ருவன் பெரேராவின் சிறப்பாட்டத்துடன், முடிவில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 129.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 494 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பாக, நிரோஷன் திக்வெல்ல 6 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 75 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அத்துடன், தில்ருவன் பெரேரா தனது மூன்றாவது டெஸ்ட் அரைச்சதம் கடந்து 51 ஓட்டங்களுடன் வலுச்சேர்ந்திருந்தார்.
பங்களாதேஷ் அணி சார்பாக, பந்து வீச்சில் இடது கை இளம் சுழல் பந்து வீச்சாளரான மெஹதி ஹஸன், இலங்கையின் முக்கிய புள்ளிகளை வீழ்த்தியதோடு, மொத்தமாக 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். மறுமுனையில், நீண்ட காலத்திற்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கட்டுப்படுத்தும் விதமான தன் பந்து வீச்சு மூலம் பெற்றிருந்தார்.
இதனையடுத்து, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஒரு இன்னிங்சுக்காக அதிக மொத்த ஓட்டங்களை (638) குவித்த பெருமைக்குரிய பங்களாதேஷ் அணி, தமது முதல் இன்னிங்சினைத் தொடங்கியது.
தமிம் இக்பால் மற்றும் செளம்யா சர்க்கர் ஆகியோருடன் மைதானம் விரைந்த, பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரினை, சுரங்க லக்மாலின் பந்து வீச்சு மூலம் போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே வீழ்த்தும் சந்தர்ப்பம் இலங்கை அணிக்கு கிட்டியது. எனினும், தில்ருவான் பெரேரா தனக்கு கிடைத்த பிடியெடுப்பினை தவறவிட, அவ்வாய்ப்பு இல்லாமல் போனது. அதே போன்று போட்டியின் 18 ஆவது ஓவரிலும் ஒரு பிடியெடுப்பு இலங்கை அணியினால் தவறவிடப்பட, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அரைச்சதம் தாண்டி, முதல் விக்கெட்டின் இணைப்பாட்டமாக 118 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக ரன்-அவுட் முறையில் பறிபோன, தமிம் இக்பால் 57 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, அவரை அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் திறமைமிக்க துடுப்பாட்ட வீரர் மொமினுல் ஹக்கும், குறைவான ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.
தொடர்ந்து, இன்றைய நாளின் முடிவில் பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்சுக்காக 2 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை 46 ஓவர்கள் முடிவில் பெற்றுள்ளது.
களத்தில், ஆட்டமிழக்காமல் செளம்யா சர்க்கர் 66 ஓட்டங்களுடனும், முஸ்பிகுர் ரஹீம் ஒரு ஓட்டத்துடனும் நிற்கின்றனர்.
இன்று ஒரு விக்கெட் மாத்திரமே இலங்கைப் பந்து வீச்சாளர்கள் சார்பில் பெறப்பட்டிருந்தது. அதனை தில்ருவான் பெரேரா தனதாக்கியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்): 494 (129.1) – குசல் மெண்டிஸ் 194(285), அசேல குணரத்ன 85(134), நிரோஷன் திக்வெல்ல 75(76), தில்ருவான் பெரேரா 51(77), திமுத் கருணாரத்ன 30(76), ரங்கன ஹேரத் 14(19), மெஹதி ஹஸன் 113/4(22), முஸ்தபிசுர் ரஹ்மான் 68/2(25)
பங்களாதேஷ் அணி (முதல் இன்னிங்ஸ்): 133/2 (46) – தமிம் இக்பால் 57(112), செளம்யா சர்க்கர் 66*(133), தில்ருவான் பெரேரா 32/1(13)
போட்டியின் மூன்றாம் நாளை தொடரும்.