செப்டம்பர் 28ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடருக்கான தற்காலிக இலங்கைக் குழாத்தின் பட்டியல் இலங்கை கிரிக்கெட் சபையினால் இன்று வெளியிடப்பட்டது.
அனுபவமிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் தோல்பட்டை உபாதையின் பின்னர் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். பிரசாத் இறுதியாக 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் பங்குபற்றி இருந்ததுடன் அதன் பின்னர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டிகளிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரசாத் 41 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான அணித் தலைவர் உபுல் தரங்க ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் முக்கிய கவனம் செலுத்துவதற்காக இத்தெடரிலிருந்தும் எதிர்வரும் 6 மாதங்களுக்கும் விலகியுள்ளார். நடந்து முடிந்த இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் உபுல் தரங்க ஆரம்ப வீரராகக் களமிறங்கி இருந்ததுடன் மொத்தமாக 6 இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைச்சதம் உள்ளடங்களாக 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.
மோசமான துடுப்பாட்டம் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரின் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்ட வலது கை துடுப்பாட்ட வீரர் கௌசால் சில்வாவும் இக்குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் கலக்கும் ரோசன் சில்வா, இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் 2016/2017 காலப்பகுதியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரான சதீர சமரவிக்ரம மற்றும் 19 வயதின் கீழ் அணியின் முன்னாள் தலைவர் சரித் அசலங்க ஆகியோர் 25 பேரைக் கொண்ட குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய பந்துவீச்சுக் குற்றச்சாட்டுக்குள்ளாகி நீண்ட நாட்கள் போட்டிகளில் பங்கு பற்றாத சமிந்த எரங்க, சர்வதேச கிரிக்கெட் சபையினால் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரும் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார். வலதுகை சுழற்பந்து வீச்சாளர்களான ஜெப்ரி வென்டர்சே மற்றும் அகில தனன்ஞய ஆகியோரும் 25 பேர் கொண்ட குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்கெதிரான தொடரின் போது காயத்திற்குள்ளாகிய அசேல குணரத்ன இன்னும் பூரணமாக குணமாகாத காரணத்தினால் இக்குழாமில் உள்வாங்கப்படவில்லை என்பதுடன் தனுஷ்க குணதிலக மற்றும் குசல் பெரேரா ஆகியோரும் இக்குழாமில் பெயரிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு இராட்சியத்தில் இடம்பெறவுள்ள இத்தொடரில் ஒரு போட்டி பகல் நேரப் போட்டியாகவும் மற்றையது பகலிரவுப் போட்டியாகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை குழாம்
- திமுத் கருணாரத்ன
- கௌசால் சில்வா
- குசல் மெண்டிஸ்
- தினேஷ் சந்திமால் – தலைவர்
- அஞ்செலோ மெதிவ்ஸ்
- லஹிரு திரிமான்ன
- நிரோசன் திக்வெல்ல
- சதீர சமரவிக்ரம
- ரங்கன ஹேரத்
- சுரங்க லக்மால்
- நுவான் பிரதீப்
- லக்ஷான் சந்தக்கன்
- விஷ்வ பெர்னாண்டோ
- லஹிரு குமார
- ஜெப்ரி வென்டர்சே
- மிலிந்த சிரிவர்தன
- தனன்ஞய டி சில்வா
- துஷ்மந்த சமீர
- தில்ருவன் பெரேரா
- மலிந்த புஷ்பகுமார
- ரோஷன் சில்வா
- அகில தனன்ஞய
- சரித் அசலங்க
- சமிந்த எரங்க
- தம்மிக பிரசாத்