இன்று மொரட்டுவையில் ஆரம்பித்திருந்த இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் நிறைவில், துடுப்பாட்டம், பந்து வீச்சு ஆகிய இரு துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இங்கிலாந்து லயன்ஸ் அணி வலுவான நிலையில் இருக்கின்றது.
முன்னதாக இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணியின் தலைவர் நிப்புன் கருணநாயக்க துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
இதன்படி, தமது முதல் இன்னிங்சினை ஹஷான் துமிந்து, ரொன் சந்திரகுப்தா உடன் ஜனாதிபதி அணி ஆரம்பம் செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான துமிந்து போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே டொம் குர்ரனின் பந்து வீச்சில் 5 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். அதனையடுத்து புதிதாக மைதானத்தில் நுழைந்த இரோஷ் சமரசூரியவை அதே உத்வேகத்துடன் தனது அடுத்த ஓவரில் குர்ரன் ஓட்டம் எதுவும் பெறாமல் வீழ்த்தினார்.
பின்னர், தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்த ஜனாதிபதி பதினொருவர் அணி ஐம்பது ஓட்டங்களை கடந்த பின்னர் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, ஒரு கட்டத்தில் 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் களத்தில் நின்ற டிலான் ஜயலத் ஏனைய துடுப்பாட்ட வீரருடன் இணைந்து ஒரு வலுவான இணைப்பாட்டத்திற்கு வித்திட முயன்றார். இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் காரணமாக அவரின் முயற்சிக்கு பலன்கிட்டவில்லை.
தொடர்ந்தும் விக்கெட்டுக்கள் பறிபோன காரணத்தினால் இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி, 53.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் முழுமையாக பறிகொடுத்து 153 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்சுக்காக பெற்றது.
இலங்கை ஜனாதிபதி அணி சார்பாக, துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரொன் சந்திரகுப்தா 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு, மத்திய வரிசையில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தினை காண்பித்த டிலான் ஜயலத் 26 ஓட்டங்களை குவித்தார்.
பந்து வீச்சில், இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பாக திறமையினை வெளிக்காட்டியிருந்த டொம் ஹெல்ம் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சக பந்து வீச்சாளர்களான கிரைக் ஓவர்டன் மற்றும் டொம் குர்ரன் ஆகியோர் தமக்கிடையே இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை அணித்தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் மற்றும் இளம் வீரர் ஹஸீப் ஹமீத் ஆகியோருடன் விருந்தினர் அணியான இங்கிலாந்து லயன்ஸ் ஆரம்பித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும், ஜனாதிபதி அணியின் வேகப்பந்து வீச்சாளர் விமுக்தி பெரேராவின் பந்து வீச்சில் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், மத்திய வரிசை வீரர்களான டொம் வெஸ்லி (65) மற்றும் லியாம் லிவிங்ஸ்ட்டொன் (61) ஆகியோர் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதங்களின் உதவியுடன் இங்கிலாந்து லயன்ஸ் போட்டியின் ஆட்ட நேர நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 39 ஓவர்களில் 168 ஓட்டங்களை பெற்று இன்றைய நாளில் வலுப்பெற்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி – 153 (53.3) – ரொன் சந்திரகுப்தா 48, டிலான் ஜயலத் 26, தரிந்து கெளஷால் 18*, தோமஸ் ஹெல்ம் 3/18, டொம் குர்ரன் 2/23, கிரைக் ஓவர்டன் 2/31
இங்கிலாந்து லயன்ஸ் அணி – 168/4 (39) – டொம் வெஸ்லி 65*, லியாம் லிவிங்ஸ்டன் 61*, விமுக்தி பெரேரா 2/15