அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் 10 ஆவது நாளும், மெய்வல்லுனர் விளையாட்டின் இறுதி நாளுமான இன்றைய தினம், ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி, 39.08 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து, புதிய தேசிய சாதனையுடன் 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
சுமார் 68 வருடங்களுக்குப் பிறகு பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை அணி, நேற்று (13) நடைபெற்ற தகுதிச் சுற்றில் 39.47 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 3 ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அஞ்சலோட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி
இதன்படி, சித்திரை புதுவருட தினமான இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு 8 ஆவது சுவட்டில் ஓடுவதற்கு வாய்ப்பு கிட்டியது.
உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரர்களின் பங்கேற்புடன் விறுவிறுப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ஜமைக்கா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் போட்டியிட்ட இலங்கை அணி 39.08 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
அத்துடன், ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் 3 வருடங்களுக்குப் பிறகு தேசிய சாதனையையும் இலங்கை அணி படைத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அஞ்சலோட்ட அணி, 39.38 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தேசிய சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேசிய சாதனை நிகழ்த்திய இலங்கை அஞ்சலோட்ட அணி, போட்டியின் பிறகு தமது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். இதில் இலங்கை மெய்வல்லுனர் அணியின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரும், கிழக்கின் நம்பிக்கை நட்சத்திரமுமான மொஹமட் அஷ்ரப் கருத்து வெளியிடுகையில்,
”முதலில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இனிய சித்திரை புதுவருட நல் வாழ்த்துக்கள். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் எமது அணி, தேசிய சாதனையுடன் 6 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் சிறப்பாக ஓடி நாட்டுக்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுப்போம்” என தெரிவித்தார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை 6 பதக்கங்கள் வென்று சாதனை
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த ஹிமாஷ ஏஷான், சுரன்ஜய டி சில்வா, மொஹமட் அஷ்ரப் மற்றும் ஷெஹான் அம்பேப்பிட்டிய ஆகிய வீரர்களைக் கொண்ட அணிதான் இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவிலும் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேநேரம், ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் 38.13 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த இங்கிலாந்து அணி தங்கப் பதக்கத்தையும், புதிய தேசிய சாதனையுடன் தென்னாபிரிக்க அணி (38.24 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பிரபல ஜமைக்கா அணி (38.35 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.
எனவே, பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தரமான ஓடுபாதைகள் இல்லாமல் கஷ்டத்துக்கு மத்தியில் உலகின் 2 ஆவது ஒலிம்பிக் விழா என அழைக்கப்படுகின்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்த இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு எமது இணையளத்தளம் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஈட்டி எறிதலில் சம்பத்துக்கு ஏமாற்றம்
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்து கொண்ட இலங்கையின் சம்பத் ரணசிங்க, 70.15 மீற்றர் தூரத்தை எறிந்து 12 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் பங்கேற்ற சம்பத் ரணசிங்க, முறையே 74.72, 71.75 மற்றும் 73.93 மீற்றர் தூரங்களைப் பதிவு செய்து 6 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டு இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றுக் கொண்டார்.
பொதுநலவாய மெய்வல்லுனரில் இறுதிப் போட்டியில் 2 இலங்கையர்
எனினும், இன்று (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெரிதளவில் சோபிக்கத் தவறிய அவர், முறையே 69.44, 70.15 மற்றும் 68.61 மீற்றர் தூரங்களை எறிந்து கடைசி இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
எனினும், கடந்த ஜனவரி மாதம் தியகமவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் 81.22 மீற்றர் தூரத்தை எறிந்து தனது சிறந்த தூரத்தை சம்பத் ரணசிங்க பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 12 வீரர்கள் பங்குபற்றிய இறுதிப் போட்டியில் 86.47 மீற்றர் தூரத்தை எறிந்த இந்தியாவின் நிராஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியாவின் ஹமிஷ் பீகொக் வெள்ளிப் பதக்கத்தையும், தென்னாபிரிக்காவின் வேன் ரென்ஸ்பேர்க் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.