மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இலங்கையின் ஒருநாள், T20 குழாம் அறிவிப்பு

1307
(Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணிக் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மூவகைப் போட்டிகளும் (T20, ஒருநாள், டெஸ்ட்) கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகின்றது. 

பயிற்சிப் போட்டியில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய திமுத், ஷானக

இந்த கிரிக்கெட் தொடர்கள் மார்ச் மாதம் 03ஆம் திகதி நடைபெறவுள்ள T20 தொடருடன் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில், T20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கையின் அணிக்குழாமே வெளியிடப்பட்டுள்ளது. 

இரு தொடர்களுக்கும் மொத்தம் 20 பேர் கொண்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணிக் குழாமில் 8 துடுப்பாட்ட வீரர்கள், 3 சகலதுறை வீரர்கள், 4 சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் 5 வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன செயற்பட, T20 அணியின் தலைவராக லசித் மாலிங்கவிற்குப் பதிலாக தசுன் ஷானக்க புதிய நியமனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அரவிந்த டி சில்வா

தோல் தொடர்பான பரிசோதனை ஒன்றில் சித்தியடையத் தவறிய, பானுக்க ராஜபக்ஷ மற்றும் இளம் சகலதுறைவீரர் சந்துஷ் குணத்திலக்க ஆகிய இருவரினையும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் உள்ளடக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், உபாதைகள் காரணமாக குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, இசுரு உதான மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரும் மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப் பயணத்தில் இணைக்கப்படவில்லை.

இந்த நிலையில் உள்ளூர் போட்டிகளில் ஓட்ட இயந்திரமாக செயற்பட்டு வருகின்ற பத்தும் நிஸங்க, இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் அஷேன் பண்டார ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப்பயணத்துடன் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை பெறவுள்ளனர்.

இதேநேரம் இளம் சுழல் பந்துவீச்சாளரான ரமேஷ் மெண்டிஸ், வேகப் பந்துவீச்சாளர்களான அசித்த பெர்னாந்து, டில்ஷான் மதுசங்க ஆகியோரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்கின்ற வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் மூலம் முதல்முறையாக பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை T20 அணியின் புதிய தலைவராக தசுன் ஷானக!

இதேவேளை, முறையற்ற பந்துவீச்சினால் 2 வருடப் போட்டித் தடைக்கு உள்ளாகிய அகில தனன்ஞயவும் இலங்கை அணியில் மீண்டும் இணைந்திருக்க, 2 வருட இடைவெளிக்குப் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு தினேஷ் சந்திமாலுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான லஹிரு திரிமான்ன மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர், உடற்தகுதி பரிசோதனைகளுக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இலங்கை விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடரில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் T20, ஒருநாள் அணிக்குழாம்

திமுத் கருணாரத்ன(ஒருநாள் அணித்தலைவர்), தசுன் ஷானக்க(T20 அணித்தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் டிக்வெல்ல, ஒசத பெர்னாந்து, பத்தும் நிஸங்க, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார, திசர பெரேரா, வனிந்து ஹஸரங்க, லக்ஷான் சந்தகன், அகில தனன்ஞய, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, நுவான் ப்ரதீப், துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாந்து, டில்ஷான் மதுசங்க

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<