இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங்கில் இடம்பெற்றுவரும் 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இலங்கைக்கு பதக்கமொன்றைப் பெற்றுக் கொடுக்கின்ற போட்டியாக அமைந்த ஆண்களுக்கான 4 x 100 சாதாரண அஞ்சலோட்டம் இன்று காலை (22) நடைபெற்றது.
இதில் வீரரொருவரினால் மேற்கொள்ளப்பட்ட தவறான ஆரம்பத்தினால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பையும் இலங்கை அணி தவறவிட்டது. அத்துடன், புதிய இலங்கை சாதனையொன்றை நிகழ்த்துவதற்கான வாய்ப்பையும் இலங்கை அணி நழுவவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் பெறும் வாய்ப்பை மயிரிழையில் இழந்த இலங்கை வீரர்
ஜகார்த்தாவிலுள்ள க்ளோனா பன்க் கரோனா நீச்சல் தடாகத்தில் நான்காவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்ற நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டப் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுக்கள் இன்று காலை நடைபெற்றது. இதில் இலங்கை அணி சார்பாக மெத்திவ் அபேசிங்க, கைல் அபேசிங்க, சிர்ந்தத டி சில்வா மற்றும் அகலங்க பீரிஸ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றின் ஆறாவது ஓடுபாதையில் மெத்திவ் அபேசிங்க தலைமையிலான இலங்கை அணி களமிறங்கியதுடன், இலங்கை அணிக்கான முதலாவது ஆரம்பத்தை நட்சத்திர வீரர் மெத்திவ் அபேசிங்க பெற்றுக்கொடுத்தார்.
ஜப்பான், கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பிரபல நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த மெத்திவ் அபேசிங்க, 49.16 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலாவது வீரராக தனது போட்டியை நிறைவுசெய்தார்.
அதன் பிறகு, 2 ஆவது வீரராக கைல் அபேசிங்க போட்டியை முன்னெடுத்தார். மெத்திவ் பெற்றுக்கொடுத்த ஆரம்பத்தை கைல் இதன் போது தவறவிட்டார். இதனால் இலங்கை அணிக்கு மூன்றாவது இடத்துடன் போட்டியை முன்னெடுக்க நேரிட்டது. தொடர்ந்து சிரந்த த டி சிவ்வாவும், இறுதியாக அகலங்க பீரிசும் அடுத்தடுத்து போட்டிகளை நிறைவு செய்தனர். இதன்படி, 3 நிமிடங்களும் 22.34 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இலங்கை அணி நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. ஆண்களுக்கான 4 x 100 சாதாரண நீச்சலில் புதிய இலங்கை சாதனையாகவும் இது பதிவாகியது.
அதுமாத்திரமின்றி, 18 அணிகள் பங்குபற்றிய தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியையும் பெற்றுக்கொண்டது.
கொரியாவிடனும் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி
எனினும், போட்டியின் பிறகு நீச்சல் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட பிரமாண்டமான திரையில் போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இலங்கை அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இலங்கை நீச்சல் அணியின் பயிற்றுவிப்பாளரான ஹுலுமே மைக்கல் ஆரோன், தொழில்நுட்பக் குழுவினரை உடனே சந்தித்து குறித்த போட்டியின் வீடியோ காணொளியை மீள்பரிசீலனை செய்தார். இதில் இரண்டாவது வீரராக போட்டியிட்ட கைல் அபேசிங்க, மெத்திவ் அபேசிங்க போட்டியை நிறைவுசெய்ய முன்னரே தனது ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் காரணமாகவே இலங்கை அணியை தகுதி நீக்கம் செய்ய போட்டி நடுவர்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்ற சம்பவமொன்று கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் இடம்பெற்றது.
மெத்திவ் அபேசிங்க தலைமையிலான இலங்கை 4 x 100 அஞ்சலோட்ட அணி, அரையிறுதிப் போட்டியை 3 நிமிடங்களும் 22.84 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்ததுடன், இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டது.
எனினும், குறித்த போட்டியில் நான்காவது வீரராக கலந்து கொண்ட சிரந்த டி சில்வாவின் தவறான ஆரம்பத்தினால் இலங்கை அணியை தகுதி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை அணயின் பயிற்றுவிப்பாளர் ஹுலுமே மைக்கல் ஆரோன் கருத்து வெளியிடுகையில், போட்டியில் கைல் அபேசிங்க தவறான ஆரம்பத்தை மேற்கொண்டுள்ளமை பதிவாகியுள்ளது. இதே மாதிரியான சம்பவத்தை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய போட்டிகளிலும் சந்திக்க நேரிட்டது. பொதுவாக எங்களுடைய பெரும்பாலான வீரர்கள் தனித்தனியே, வெவ்வேறான நாடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சர்வதேசப் போட்டிகளில் வரும்போதுதான் எமது வீரர்கள் ஒன்றாக பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே அவர்களுக்கிடையில் போட்டி தொடர்பான புரிந்துணர்வு ஏற்படாவிட்டால் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவது வழக்கம். எனவே எதிர்வரும் காலங்களில் இந்த மாதிரியான தவறுகளைத் திருத்திக் கொள்ள வீரர்கள் ஒன்றிணைந்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
அமரர் வைத்தியலிங்கம் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம் கலையரசி அணிக்கு
இதேவேளை, இம்முறை ஆசிய வினையாட்டு விழாவில் இலங்கை வீரர்களின் கடைசிப் போட்டிகள் அனைத்தும் நாளை (23) நடைபெறவுள்ளன. இதில் மெத்திவ் அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க ஜோடி ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சலிலும், சிரந்த டி சிவ்வா 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சலிலும், அகலங்க பீரிஸ் 200 மீற்றர் பின்நோக்கிய நீச்சலிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க