கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.
இதன்படி, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பங்களாதேஷ் அணி, ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் எப்போது?
அதுமாத்திரமின்றி, இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்தவும், அண்மையில் நிறைவுக்கு வந்த இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பின்பற்றப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை இந்தத் தொடரிலும் பின்பற்றுவதற்கும் இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஸாமுத்தீன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில்,
”இலங்கை கிரிக்கெட் சபையுடன் மேற்கெண்ட பேச்சுவார்த்தையினை அடுத்து இந்தத் தொடரை ஏப்ரல் மாதம் நடத்தவதற்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணி வீரர்கள் ஏப்ரல் மாதம் 12 முதல் 15ஆம் திகதிக்குள் இலங்கையை சென்றடையும். போட்டிகள் நடைபெறும் இடத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவிக்கும்.
இதனிடையே, இலங்கையில் தற்போது கொவிட் – 19 வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து அணியும் அண்மையில் தான் இலங்கை சென்று விளையாடியது.
எனவே, இங்கிலாந்து அணிக்கு கொடுத்த சுகாதார வழிமுறைகளை எமது வீரர்களுக்கும் வழங்கும்படி தெரியப்படுத்தியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
Video – இலங்கை வீரர்களுக்கு வெறுங்கனவாய்ப்போன IPL…!
முன்னதாக, ஐசிசி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, கடந்த வருடம் ஜுலை மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை வரவிருந்தது.
எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் குறித்த தொடரை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் நடவடிக்கை எடுத்திருந்தன.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் கொவிட் – 19 வைரஸ் விதிமுறைகள் காரணமாக குறித்த தொடரில் பங்கேற்க முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ்
எவ்வாறாயினும், குறித்த டெஸ்ட் தொடர் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள போதும், போட்டி அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை ஏற்கனவே உறுதி செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<