சதத்தை தவறவிட்ட சிம்ரோன் ஹெட்மையர் : பலமான நிலையில் மேற்கந்திய தீவுகள் A அணி

1391
S.Hetmyer sl v wi

மேற்கிந்திய தீவுகள் A அணியினர் தமது துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த மற்றும் நிதானமான ஆட்டம் மூலம் இலங்கை அணிக்கு சவால் விடும் வகையில் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது பலமான நிலையினை நோக்கி நகர்ந்திருந்தனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது.

இப்போட்டியின் நேற்றைய முதலாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை A அணி 80 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றிருந்தது. களத்தில் ரோஷன்  சில்வா 40 ஓட்டங்களுடனும், லக்ஷன் சந்தகன் ஓட்டம் எதுவும் பெறாமலும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் தங்களது முதலாவது இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை A அணியினர், ரோஷன் சில்வா பெற்ற 49 ஓட்டங்களின் துணையுடன் 89.2 ஓவர்கள்  முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை முதல் இன்னிங்சிற்காக பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் கீயோன் ஜோசப், இன்று பெற்ற இரண்டு விக்கெட்டுக்களுடன் சேர்த்து 65 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், ரஹீம் கொர்ன்வால் 93 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், டமியோன் ஜேகப் 64 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தங்களது முதலாவது இன்னிங்சினை ராஜேந்திர சந்திரிக்கா மற்றும் கெய்ரன் பவல் ஆகியோருடன் ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணியினர் ஆரம்பத்தில் சரிவுகளை சந்தித்தனர். மேற்கிந்திய தீவுகள் A அணியின் முதாலது விக்கெட் 11 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் கசுன் மதுசன்கவினால் பறிக்கப்பட்டது. இதனால் கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜேந்திர சந்திரிக்கா சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். அவரது துடுப்பாட்டம் குறித்து மேற்கிந்திய தீவுகள் அணி அதிக எதிர்பார்ப்புடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், அவருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த கெய்ரோன் ஜோசேப்பும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற,  ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் A அணி 35 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இந்த தளர்வான நிலையினை கருத்தில் கொண்டு, அவ்வணியின்  முக்கிய வீரர்களில் ஒருவரான சிம்ரோன் ஹெடிமர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணியின் தலைவர் சாமர் புரூக்ஸ் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய தீவுகள் A அணியினை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றனர்.

இதில் 17 பவுண்டரிகள் உள்ளடங்களாக 93 பந்துகளிற்கு முகம்கொடுத்து 94 ஓட்டங்கள் பெற்றிருந்த சிம்ரோன் ஹெடிமர், லக்ஷன் சந்தகனின் பந்து வீச்சில் திரிமான்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சதம் அடிக்க இருந்த அவரின் கனவு வீணானது.

அதன் பின்னர், மழை குறுக்கிட்டதால் 54.2 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்டிருந்த நிலையில் போட்டியின் இன்றைய நாள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய ஆட்ட நேர முடிவின் போது மேற்கிந்திய தீவுகள் A அணியினர் 45 ஓவர்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றிருந்தனர். களத்தில் சாமர் புரூக்ஸ் 43 ஓட்டங்களுடனும், ஜஹ்மர் ஹமில்டன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை A அணி சார்பாக லஹிரு கமகே, கசுன் மதுசன்க, சரித் அசலன்க, லக்ஷன் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் மூன்றாவது நாள் நாளை தொடரும்

போட்டியின் சுருக்கம்:

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) –  318/10(89.2) – சந்துன் வீரக்கொடி 79, குசல் பெரேரா 69, ரோசன் சில்வா 49, சரித் அசலன்க 46, டிலோன் ஜோன்சன் 65/4, ரஹீம் கொர்ன்வெல் 93/3, டேமியன் ஜேகப் 64/2

மேற்கிந்திந்திய தீவுகள் A அணி (முதல் இன்னிங்ஸ்)183 (45) – சிம்ரோன் ஹெடிமர் 94, சாமர் புரூக்ஸ் 43*, கசுன் மதுசன்க 22/1