இங்கிலாந்து லயன்ஸை வீழ்த்தி தொடரை சமப்படுத்திய இலங்கை A அணி

1372
Hasitha Boyagoda

இன்று நடைபெற்று முடிந்திருக்கும், சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை A அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியினை சுவீகரித்துள்ளது.  

இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் இலங்கை A அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலை அடையச் செய்துள்ளது.

திமுத் கருணாரத்ன இரட்டைச்சதம்; மூன்றாம் நாள் ஆதிக்கத்தை தனதாக்கிக் கொண்ட இலங்கை A அணி

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் 24 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர நிறைவின்போது தமது இரண்டாம் இன்னிங்சிற்காக 32 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, போட்டியின் இறுதி நாளான இன்று இலங்கை A அணியினை விட 163 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது ஆட்டத்தினை தொடர்ந்தது.

இறுதி நாளின் முதல் விக்கெட்டாக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டொம் வெஸ்லி 12 ஓட்டங்களுடன் ஜெப்ரி வன்டர்சேயினால் போல்ட் செய்யப்பட்டார் அவரினை தொடர்ந்து அவ்வணியின் தலைவர் கீட்டோன் ஜென்னிங்சும் மலிந்து புஷ்பகுமாரவின் சுழலில் வீழ, தடுமாற்றத்தினை உணர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி நுணுக்கமான முறையில் காய் நகர்த்தத் தொடங்கியது.

களத்தில் நின்ற லியாம் லிவிங்ஸ்ட்டொன் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக 107 ஓட்டங்களினை பகிர்ந்தனர். ஐந்தாவது விக்கெட்டாக பறிபோன பென் போக்ஸ் அரைச் சதம் (54) கடந்திருந்தார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் ஐந்தாவது விக்கெட்டினைத் தொடர்ந்து மைதானம் வந்த அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை A அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் குறைவான ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கித் திரும்பினர்.

எனினும், தனி ஒருவராய் இலங்கை A அணியின் பந்து வீச்சினை சமாளித்து இலங்கை தரப்புக்கு சிம்ம சொப்பனமாய் காணப்பட்ட லியாம் லிவிங்ஸ்டொன் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட சதத்துடன் அவரின் அணி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 284 ஓட்டங்களைப்     பெற்றுக் கொண்டது.

லியாம் லிவிங்ஸ்டொன் மொத்தமாக, 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 140 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டு இப்போட்டியில் தனது  தொடர்ச்சியான அடுத்த சதத்தினைப் பதிவு செய்து கொண்டார்.

இலங்கை A அணிக்கான பந்து வீச்சில், மீண்டும் சிறப்பாக செயற்பட்டிருந்த  சிலாபம் மேரியன்ஸ் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, ஜெப்ரி வன்டர்சேய் 3 விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார்.

பின்னர், விருந்தினர் அணியின் இரண்டாவது இன்னிங்சின் காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 90 ஓட்டங்களினைப் பெற பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை A அணி, 17.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களினைப் பெற்று வெற்றியடைந்தது.

பதற்றத்தினை காட்டியிருந்த இலங்கை A அணியில் பெரும்பலான துடுப்பாட்ட வீரர்கள் ஓற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த உதார ஜயசுந்தர மாத்திரம் 32 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

லயன்ஸ் அணியின் பந்து வீச்சில், இலங்கை A அணிக்கு அழுத்தம் தந்த குமார் சங்கங்காரவின் அணியின் (Sussex) சக வீரர் டொம் குர்ரன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயன்ஸ் அணி (முதல் இன்னிங்ஸ்) – 353 (97.5) லியாம் லிவிங்ஸ்ட்டொன் 105, டொம் வெஸ்லி 68, கீட்டோன் ஜென்னிங்ஸ் 44, பென் போக்ஸ் 30, ஜேக் லீச் 22*, மலிந்த புஷ்பகுமார 127/8, தனஞ்சய டி சில்வா 44/1

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 548 (135.2) திமுத் கருணாரத்ன 212, சதீர சமரவிக்ரம 185, தனஞ்சய டி சில்வா 74, ஒல்லி ரெய்னர் 164/4, டொபி ரொலன்ட்ஜோன்ஸ் 67/3

இங்கிலாந்து லயன்ஸ் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 284 (92.1) லியாம் லிவிங்ஸ்ட்டொன் 140*, பென் போக்ஸ் 54, மலிந்த புஷ்பகுமார 78/5, ஜெப்ரி வன்டர்சேய் 47/2, தனஞ்சய டி சில்வா 47/2

இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 90/7 (17.4) உதார ஜயசுந்தர 32, தனஞ்சய டி சில்வா 23, டொம் குர்ரன் 38/4, ஜேக் லீச் 3/2

போட்டி முடிவுஇலங்கை A அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி