இலங்கை A அணி மற்றும் சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் நிறைவில், பலமான மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பாட்டத்தினால் இங்கிலாந்து லயன்ஸ் அணி வலுப்பெற்றுள்ளது.
டெஸ்ட் தொடரினை ஏற்கனவே 1-0 என இங்கிலாந்து லயன்ஸ் முன்னிலைப்படுத்தியிருக்கும் நிலையில் தொடரினை சமப்படுத்தும் நோக்கத்தில் இலங்கை A அணி இப்போட்டியில் விளையாடியது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட விருந்தினர் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைவர், கீட்டோன் ஜென்னிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
இதனடிப்படையில் களமிறங்கிய அவ்வணி நேர்த்தியான ஆரம்பத்தினை தந்திருந்தது. அவ்வணியில் முதல் விக்கெட்டாக மலிந்த புஷ்பகுமாரவின் சுழலில் வெளியேறிய ஹஸீப் ஹமித் 15 ஓட்டங்களினைப் பெற்று இத்தொடரில் மற்றுமொரு மோசமான ஆட்டத்தினை வெளிக்காண்பித்தார்.
ஏனைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் அணித் தலைவருமான கீட்டோன் ஜென்னிங்ஸ் 44 ஓட்டங்களினைப் பெற்று லயன்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். அவரின் விக்கெட்டினை தொடர்ந்து ஜோடி சேர்ந்த டொம் வெஸ்லி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரால் நான்காவது விக்கெட்டுக்காக 110 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டது. இதனால், இங்கிலாந்து லயன்ஸ் அணி வலுவான நிலையினை நோக்கி நகர்ந்தது.
டொம் வெஸ்லியின் விக்கெட்டினைத் தொடர்ந்து, புதிதாக வந்த பென் போக்ஸ் இனாலும், களத்தில் நின்ற லியாம் லிவிங்ஸ்ட்டோன் இனாலும் மீண்டும் ஒரு வலுவான இணைப்பாட்டம் (83) கட்டியெழுப்பப்பட்டு இருந்தது. எனினும், மலிந்த புஷ்பகுமாரவின் பந்து வீச்சின் காரணமாக அது நீடிக்கவில்லை.
தமது ஐந்தாவது விக்கெட்டினைத் தொடர்ந்து குறுகிய இடைவெளிகளில் புஷ்பகுமாரவின் சுழலில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து லயன்ஸ் இன்றைய ஆட்ட நாள் முடிவில், 91 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.
அவ்வணியின் துடுப்பாட்டத்தில், தனது மூன்றாவது முதல்தர சதத்தினைப் பெற்றுக்கொண்ட லியாம் லிவிங்ஸ்ட்டோன் 105 ஓட்டங்களினை 11 பவுண்டரிகள் உள்ளடங்களாகப் பெற்றதுடன், அரைச் சதம் கடந்த டொம் வெஸ்லி 68 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
களத்தில், ஆட்டமிழக்காமல் ஒல்லி ரெய்னர் 10 ஓட்டங்களுடனும் ஜேக் லீச் 17 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.
இலங்கை A அணியின் பந்து வீச்சில், தனது முழுத் திறமையினையும் வெளிக்கொணர்ந்த இடது கை சுழல் வீரர் மலிந்த புஷ்பகுமார லயன்ஸ் அணியின் 7 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். மேலதிக விக்கெட்டுகளை இலங்கை A அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் அசித்த பெர்னாந்துவும் ஆளுக்கொன்று வீதம் கைப்பற்றியிருந்தார்கள்.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து லயன்ஸ் அணி: 339/9 (91) – லியாம் லிவிங்ஸ்ட்டொன் 105, டொம் வெஸ்லி 68, கீட்டோன் ஜென்னிங்ஸ் 44, பென் போக்ஸ் 30, மலிந்த புஷ்பகுமார 7/114
போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்