வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயத்தின் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையில் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். மத்திய கல்லூரி அணியின் தலைவர் எஸ்.அலன்ராஜ் தாம் முதலில் துடுப்பெடுத்தாட போவதாக கூறி இருந்தார். இதற்கமைய முதலில் தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணி சார்பாக ஜெரோசன் 51 ஓட்டங்களையும் கோமேதகன் 39 ஓட்டங்களையும் அதிக பட்ச ஓட்டங்களாகப் பெற்றனர். யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணியின் சார்பில் பந்துவீச்சில் ஜதூசன் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும், நிலோஜன் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இனிங்ஸிற்காக துடுபெடுத்தாடிய யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கட்டுகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. பின் தனது ஆட்டத்தை தொடர்ந்த யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி நேற்றய 2ஆவது நாள் மதிய போசன இடைவேளைக்குள் தனது மிகுதி 6 விக்கட்டுகளையும் இழந்தது. இதன் படி தமது முதல் இனிங்ஸில் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி, யாழ். மத்திய கல்லூரி அணியை விட 2 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்று 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிருஷாந்தூஜன் 31 ஓட்டங்களையும் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய ஜதூசன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ். மத்திய கல்லூரியின் சார்பில் பந்துவீச்சில் தீபன்ராஜ் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் தஸோபன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் கைபற்றினர்.
அதன் பின் 2 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 162 ஓட்டங்கள் முன்னிலையில் 6 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று இருந்தனர். பின்பு 3ஆம் நாளில் தமது ஆட்டத்தைத் தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி அணி வீரர்கள் மதிய போசன இடைவேளைக்கு 2 ஓவர்கள் இருக்கும் நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணியின் 2ஆவது இனிங்ஸில் சகலதுறை வீரர் கிருபாகரன் மிகச் சிறப்பாக பொறுப்பாக துடுபெடுத்தாடி 130 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்சர்கள் அடங்கலாக 103 ஓட்டங்களைப் பெற்றார். இந்த
சதத்தின் மூலம் கிருபாகரன் வடக்கின் சமர் கிரிக்கட் வரலாற்றில் சதம் பெற்றவர்கள் பட்டியலில் 20ஆவது வீரர் என்ற பெருமையை தன் வசப்படுதினார். கிருபாகரனைத் தவிர அணியின் தலைவர் அலன்ராஜ் மற்றும் உப தலைவர் கோமேதகன் ஆகியோர் 34 ஓட்டங்களைப் பெற்றனர். யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி அணியின் சார்பில் பந்துவீச்சில் ஜதூசன் மற்றும் கபில்ராஜ் ஆகியோர் 3 விக்கட்டுகளை தம்மிடையே பரிமாற அணியின் தலைவர் கானாமிர்தன் மற்றும் நிலோஜன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைபற்றினர்.
பின்பு இந்த போட்டியில் 263 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ் புனித ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய 3வதும் இறுதியுமான நாள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்கள். இவ்வணி சார்பாக ஜெனி ப்லெமின் 37 ஓட்டங்களையும் கபில்ராஜ் 31 ஓட்டத்தை ஆட்டமிழக்காமலும் ஜதூசன் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ். மதிய கல்லூரியின் மதூசன் 2 விக்கட்டுகளைக் கைபற்றினார். இறுதியில் வடக்கின் சமர் 110ஆவது அத்தியாயப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான ஒரு போட்டியை கொண்ட ஒருநாள் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளமை ஒரு முக்கிய விடயமாகும்.