கென்யாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள நைரோபி கிரிக்கெட் லீக் தொடரில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சாமர கபுகெதர, லஹிரு கமகே மற்றும் அஜந்த மெண்டிஸ் உள்ளிட்ட ஆறு வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவின் ஆறு நகரங்களை உள்ளடக்கிய நைரோபி ஹோர்ன்பில்ஸ், எல்டொர்ட் ஹாக்ஸ், நகுரு பிளமிங்கோஸ், மொம்பாஸா ஈகல்ஸ், மெச்சகோஸ் வொல்சர்ஸ் மற்றும் கிசுமு கிரேன்ஸ் ஆகிய ஆறு அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன.
இந்தப் போட்டித் தொடர் நேற்றைய தினம் (15) ஆரம்பமாகியுள்ள நிலையில், சாமர கபுகெதர மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் அணிகளின் ஆலோசகர்களாக செயற்படவுள்ளனர். சாமர கபுகெதர மொம்பாஸா ஈகல்ஸ் அணியின் ஆலோசகராக செயற்படவுள்ளதுடன். அஜந்த மெண்டிஸ் கிசுமு கிரேன்ஸ் அணியின் ஆலோசகராக செயற்படவுள்ளார்.
இதில் விகும் சன்ஜய, உதார ஜயசிங்க, லஹிரு கமகே மற்றும் கிஹான் ரூபசிங்க ஆகியோர் அணிகளில் வீரர்களாக விளையாடவுள்ளனர். கிஹான் ரூபசிங்க நைரோபி ஹோர்ன்பில்ஸ் அணியிலும், விகும் சன்ஜய மெச்சகோஸ் வொல்சர்ஸ் அணிக்காகவும், உதார ஜயசிங்க நகுரு பிளமிங்கோஸ் அணிக்காகவும், லஹிரு கமகே எல்டொர்ட் ஹாக்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.
நைரோபி கிரிக்கெட் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தும் நேற்று முதல் (15) எதிர்வரும் 26ம் திகதிவரை, ருவரகா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<