கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மொஹமட் ஹபீஸ் உள்ளிட்ட ஆறு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நாளை (03) இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செள்ளவுள்ளனர்.
மூன்று டெஸ்ட் மற்றும் 3 T20i கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அசார் அலி தலைமையிலான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 28ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.
இங்கிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள்
மன்செஸ்டர் சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்களுக்கும், பயிற்சியாளர் உள்ளிட்ட உதவியாளர் அனைவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சார்பில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி வொஸ்டெர்ஷெயார் நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதி பயிற்சியை தொடங்கவுள்ளனர்.
முன்னதாக, இந்த தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ், விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான், சுழல் பந்துவீச்சாளர் சதாப் கான் உள்ளிட்ட 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்களை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இணைத்துக் கொள்ளவில்லை.
இதன் பிறகு நடத்தப்பட்ட அடுத்த கட்ட பரிசோதனையில் 6 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்‘ முடிவு வந்தது.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121
இருப்பினும், இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற பரிசோதனை அறிக்கை கட்டாயம் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் எனவும், அத்தகைய வீரர்களை மட்டுமே எங்கள் நாட்டில் அனுமதிப்போம் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை நிபந்தனை விதித்திருந்தது.
இந்த நிலையில் மொஹமட் ஹபீஸ், மொஹமட் ரிஸ்வான், வஹாப் ரியாஸ், பகார் ஜமான், மொஹமட் ஹஸனைன், சதாப் கான் ஆகிய 6 வீரர்களுக்கு 3ஆவது முறையாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன்படி, லாகூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த 6 வீரர்களும், நாளை (03) இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<