வானவேடிக்கை நிகழ்த்திய ரோஹித் சர்மாவின் உலக சாதனைகள்

448
Rohit Sharma

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அவ்வணியை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியிருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று(13) நடைபெற்றது. தொடரினை பறிகொடுக்காமல் நீண்டகால சாதனையொன்றை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி இப்போட்டியில் களமிறங்கியது.  

ரோஹித் சர்மாவின் இரட்டைச் சதத்தோடு ஒரு நாள் தொடரை சமன் செய்த இந்தியா

நடபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்..

இப்போட்டியில் விஸ்வரூபம் எடுத்த ரோஹித் சர்மாவின் அதிரடி இரட்டைச் சதத்தால் இந்திய அணி 141 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. ரோஹித் சர்மாவின் சாதனைகள் மட்டுமின்றி, இந்திய அணியும் ஒட்டுமொத்தமாக பல சாதனைகள் படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா, தனது திருமண நாளில் 3ஆவது இரட்டைச் சதத்தைக் கடந்து உலக சாதனை படைத்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இப்போட்டியில் 12 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா, இந்த ஆண்டு அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 32 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவரை அடுத்து ஹர்திக் பாண்ட்யா (27 போட்டி, 30 சிக்ஸர்), இங்கிலாந்தின் இயென் மோர்கன் (20 போட்டி, 20 சிக்ஸர்) ஆகியோர் உள்ளனர்.  

அத்துடன், டி வில்லியர்ஸ், மார்டின் கப்தில் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய 3 துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே ஒரு நாள் போட்டியொன்றில் 10 சிக்ஸர்களுக்கும் மேல் விளாசியுள்ளார்கள்.  

115 பந்துகளில் சதமடித்த ரோஹித், 16ஆவது ஒரு நாள் சதத்தை பூர்த்திசெய்துவிட்டு, அடுத்த 100 ஓட்டங்களை வெறுமனே 36 பந்துகளில் கடந்தார்.

16ஆவது ஒரு நாள் சதத்தை எட்ட சச்சினுக்கு 185 இன்னிங்சுகள் தேவைப்பட்டன. கங்குலிக்கு 151 இன்னிங்சுகள் தேவைப்பட்டன. கோஹ்லி அதை 110 போட்டிகளிலேயே எட்டிவிட்டார். ரோஹித் சர்மா 167ஆவது போட்டியில் 16ஆவது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிகமுறை சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சேவாக்கை (15 சதம்) முந்தி 4ஆவது இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

அது போன்றே ஒரு நாள் அரங்கில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் 9ஆவது இடத்தை அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்குடன் ரோஹித் பகிர்ந்துகொண்டார். இருவரும் தலா 162 சிக்ஸர்களை குவித்துள்ளனர். முதலிடத்தில் பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி (398 போட்டிகள், 351 சிக்ஸர்கள்) உள்ளார்.

69 பந்துகளில் 18 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு..

இரட்டைச் சதமடித்த ரோஹித், ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட கோஹ்லி, 139 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்திருந்தார்.   

இந்த வருடத்தில் இதுவரை 6 சதங்களை ரோஹித் சர்மா குவித்துள்ளார். இதன்மூலம் ஒரே வருடத்தில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். சச்சின் (1996), ட்ராவிட்(1999), கோஹ்லி(2017) ஆகியோரும் தலா 6 சதங்களை பெற்றுக்கொண்டனர். முதலிரண்டு இடங்களில் சச்சின் (9 சதம்), கங்குலி (7 சதம்) வகிக்கின்றனர்.

3 இரட்டைச் சதங்கள்

ஒரு நாள் அரங்கில் இதுவரை 7 தடவைகள் இரட்டைச் சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் ரோஹித் மட்டும் 3 தடவைகள் இரட்டைச் சதங்களை குவித்துள்ளார். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 208 ஓட்டங்களையும், 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 264 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.  

ரோஹித் சர்மா தவிர இந்தியாவின் சேவாக், சச்சின் டெண்டுல்கர், நியூசிலாந்தின் மார்டின் கப்டில் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஆகியோரும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்துள்ளனர்.

2ஆவது தலைவர்

ஒரு நாள் அரங்கில் ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைக் குவித்த 2ஆவது இந்திய தலைவர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டார். 2011இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சேவாக் 219 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காம்பிர், கோஹ்லியுடன் இணைந்த ரோஹித்

ஒரு நாள் அரங்கில் குறைந்த போட்டிகளில் (2) சதம் எட்டிய இரண்டாவது இந்திய தலைவர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டார். இதில் காம்பிர் மற்றும் கோஹ்லிக்கு சதத்தை எட்டுவதற்கு 2 போட்டிகள் எடுத்தன. முதலிடத்தில் ஒரு போட்டியுடன் சச்சின் உள்ளார்.

இலங்கைக்கு சிம்ம சொப்பனம்

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை(208) எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டார். இதில் முதலிடத்திலும் அவரே உள்ளார். இதில் 4 மற்றும் 5ஆவது இடங்களில் முறையே தென்னாபிரிக்காவின் டூ ப்ளெசிஸ், இந்தியாவின் டோனி ஆகியோர் உள்ளனர்.

டெஸ்ட் அரங்கில் கால்பதிக்கும் ஆப்கானிஸ்தான் முதலில் சந்திக்கும் அணி இந்தியா!

இலங்கை அணி எந்த திசையில் பயணிக்கப்போகிறது..

திருமண நாள் பரிசு

ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகாவுக்கு நேற்றுடன் திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதில் ரித்திகா நேற்று நடைபெற்ற போட்டியை நேரில் கண்டுகளித்தார். ரோஹித் இரட்டைச் சதம் அடிப்பதற்கு முன் பதற்றத்துடன் இருந்த ரித்திகா, தனது கணவர் புதிய உலக சாதனை படைத்ததும் ஆனந்தக் கண்ணீருடன் உற்சாகமடைந்தார். எனவே ஒரு நாள் அரங்கில் 3ஆவது இரட்டைச் சதம், தலைவராக முதல் வெற்றி என்பன ரோஹித்தின் திருமண நாள் பரிசாக அமைந்தன.

எனக்கு மிகச் சிறந்த நாள்

இரட்டைச் சதம் அடித்தவுடன், 2ஆவது ஒரு நாள் போட்டியில் வெற்றிபெற்றதால் இந்த நாளை எனது வாழ்க்கையில் மிகச் சிறந்த நாளாக கருதுவதாக உலக சாதனை படைத்து ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் சர்மா தெரிவித்தார்.

போட்டியின் பிறகு ரோஹித் சர்மா கருத்து வெளியிடுகையில், சதம் அடித்தவுடன் ஆட்டமிழந்துவிடக் கூடாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். இப்படித்தான் இதற்கு முன்பு 2 தடவைகள் இரட்டைச் சதம் அடித்தேன். 3 இரட்டைச் சதங்களுமே முக்கியமான தருணங்களில் வந்ததே. ஆனாலும் 264 என்பது எனக்கு நெருக்கமான ஒரு இன்னிங்ஸ். இதனைப் பலமுறை நான் கூறினாலும் எது சிறந்தது என்று என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரட்டைச் சதம் தொடரின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் போட்டி. இலங்கைக்கு எதிரான 264 ஓட்டங்கள் எனது பெரிய காயத்தினால் எடுத்துக் கொண்ட 3 மாத ஓய்வுக்குப் பிறகு வந்தது. இந்த இரட்டைச் சதம் மிக மோசமான தோல்விக்குப் பிறகு வந்துள்ளது. இந்த நாள் எனக்கு திருமண நாளாகும். எனவே இரட்டைச் சதத்தை திருமண நாள் பரிசாக எனது மனைவிக்கு அளிக்கிறேன்.

இப்போட்டியில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுவோம்” என்றார்.

அதிகபட்ச ஓட்டம்

மொஹாலி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இந்திய அணி பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டமாக(392) இது பதிவாகியது. இதற்கு முன்பு நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி எடுத்ததே இந்த மைதானத்தில் அதிகபட்ச ஓட்டமாக இருந்தது.  

100 தடவைகள் 300

ஒரு நாள் போட்டியில் 100ஆவது முறையாகவும் 300 ஓட்டங்களைக் கடந்த முதல் அணியாக இந்தியா புதிய சாதனையை படைத்தது. அத்துடன், இவ்வருடத்தில் 10ஆவது தடவையாகவும் இவ்வணி இம்மைல்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 300 ஓட்டங்களை 96 தடவைகள் கடந்த அவுஸ்திரேலிய அணி 2ஆவது இடத்திலும் உள்ளது.

விக்கெட்டுக்களில் சதம்

ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை அள்ளிக்கொடுத்தவர்கள் (109 ஓட்டங்கள்) பட்டியலில் இலங்கையின் நுவன் பிரதீப் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவுஸ்திரேலியாவின் மிக் லெவிஸ்(113 ஓட்டங்கள்), பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ்(110 ஓட்டங்கள்) ஆகியோர் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

தோல்வியே கிடையாது

2015 முதல் இந்திய அணி சொந்த மண்ணில் இரு தரப்பு தொடர்களில் எந்த வகை கிரிக்கெட் போட்டியிலும் தொடரை தோற்றது இல்லை. இதில் 13 தொடர்களில் இந்தியா வென்றுள்ளதுடன், 1 டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

டுவிட்டரில் குவியும் வாழ்த்துகள்

உலக சாதனை படைத்த ரோஹித் ர்மாவுக்கு தற்பொழுது டுவிட்டரில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

30 ஓவர்களில் 500 ஓட்டங்களைக் கடந்த இளம் ஆரம்ப ஜோடி

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் ( MCA)..

சச்சின் டெண்டுல்கர்

ரோஹித் துடுப்பாடுவதை எப்போதும் ரசித்துப் பார்க்கலாம். சாதனை தொடரட்டும் நண்பா.

செவாக்

வாவ் ரோஹித் வாவ், 100இல் இருந்து 200 ஓட்டங்களை 35 பந்துகளில் எடுத்தது சூப்பர். பாராட்டுக்கள் ரோஹித்.

சன்ஜே மன்ஞ்ரேக்கர்

200 ஓட்டங்களை எட்ட எவ்விதமான துடுப்பாட்ட நுட்பங்களும் ரோஹித்துக்கு தேவைப்படவில்லை. பாராட்டுக்கள் ரோஹித்

மஹேல ஜயவர்தன

சிறப்பான ஆட்டம் ரோஹித். அவரது துடுப்பாட்டம் சாதாரணமாக இருந்தது. எனினும், அவர் விளையாடிய விதம் எமக்கு சிறந்த விருந்தாக அமைந்தது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை

ஒரு முறைக்கு மேல் எந்தவொரு வீரரும் இரட்டைச் சதம் அடித்ததில்லை. ரோஹித் மூன்று முறை சாதித்துவிட்டார். உண்மையில் இது நம்ப முடியாத ஆட்டம்தான்.