நேபாளத்தில் சாதாரண தர பரீட்சை எழுதிய இலங்கை வீராங்கனைகளுக்கு சிறந்த பெறுபேறுகள்

242

கடந்த 2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் (27) வெளியாகியது. இதில், கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றிக் கொண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய வீராங்கனைகள் சிலர் அதிசிறந்த பெறுபேறுகளை எடுத்து அசத்தியுள்ளனர்.   

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

ஏழு இலங்கை வீரர்களுக்கு நேபாளத்தில் பொதுச் சாதாரணதரப் பரீட்சை

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் …..

தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற பாடசாலை செல்கின்ற மாணவர்களும் குறித்த போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்திருந்தனர்

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கு முகங்கொடுக்க இருந்த ஆறு வீராங்கனைகள் இலங்கை குழாத்தில் இடம்பிடித்திருந்ததுடன், இவர்களுக்கு நேபாளத்தில் வைத்து பரீட்சை எழுதுவதற்கான சகல ஏற்பாடுகளையும் தேசிய ஒலிம்பிக் குழு செய்து கொடுத்தது.  

இதன்படி, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பூரண அனுசரணையுடன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன், கத்மண்டுவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட பரீட்சை நிலையத்தில் வைத்து இந்த வீரர்கள் பரீட்சை எழுதியிருந்தனர்

இந்த வீரர்களை மேற்பார்வை செய்வதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்றும் அங்கு விஜயம் செய்திருந்தனர்

இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் (27) வெளியிடப்பட்டது

>>South Asian Games 2019<<

இதில் கத்மண்டுவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதிய ஆறு மாணவிகளில் மொறட்டுவை ப்ரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியைச் சேர்ந்த சதுனி கருணாரத்ன, 9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றுக் கொண்டார்.   

அத்துடன், குறித்த பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு மாணவியான சமோதி கருணாரத்ன 8 பாடங்களில் A சித்திகளைப் பெற்று உயர்தரத்தில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவ்விரண்டு மாணவிகளும் இரட்டைச் சகோதரிகள் என்பதுடன், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வாள் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதனிடையே தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான டென்னிஸ் போட்டியில் பங்குகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற கொழும்பு மகளிர் வித்தியாலத்தைச் சேர்ந்த அலேனா செனவிரத்ன 7 பாடங்களில் A  சித்திகளையும் 2 பாடங்களில் B சித்திகளையும் பெற்று உயர்தரத்துக்கு தகுதி பெற்றார்

அத்துடன், பெண்களுக்கான மேசைப்பந்தில் பங்குகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற அதே கொழும்பு மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த எய்லா சிட்டி 5 பாடங்களில் A சித்திகளையும், ஒரு B சித்தி மற்றும் ஒரு C சித்தியினைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் பங்குகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற கொழும்பு விஷாகா கல்லூரியைச் சேர்ந்த யெஹானி குருப்பு 4 பாடங்களில் A சித்திகளுடன் இரண்டு B சித்திகள் மற்றும் ஒரு C  சித்தியினைப் பெற்றார்.   

இதேவேளை, பெண்களுக்கான நீச்சல் போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற கொழும்பு விஷாகா கல்லூரியைச் சேர்ந்த கங்கா செனவிரத்ன, 4 பாடங்களில் A  சித்திகளுடன் இரண்டு B சித்திகள் மற்றும் ஒரு C சித்தியினைப் பெற்று அசத்தியுள்ளார்

எனவே, விளையாட்டுத்துறையைப் போல படிப்பிலும் அதீத திறமைகளை வெளிப்படுத்திய இந்த வீராங்கனைகள் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க வந்து சாதாரண தர பரீட்சைக்கு சிறப்பாக முகங்கொடுத்திருந்ததுடன், சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.   

விளையாட்டு ஒருபோதும் படிப்புக்கு தடையாக இருக்காது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள இந்த வீராங்கனைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<