கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள்
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர் கொண்ட…
16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரி மாணவி எல். ஹபுஆராச்சி (37.91 மீற்றர்), 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன் (7.19 மீற்றர்), பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா (6 நிமிடம் 37.9 செக்.) ஆகியோர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இன்று ஆரம்பமாகிய மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஐந்து பதக்கங்களை வென்றனர்.
இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவர்களான எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் மற்றும் ஏ. ஜினோயன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்று அசத்தியிருந்தனர்.
இதன்படி, 4.00 மீற்றர் உயரத்தை தாவிய எஸ். சுகிதர்தன், எஸ். ஜம்சன் ஆகிய வீரர்கள் சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் வர்ண சாதனையுடன், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றிகொள்ள, 3.60 மீற்றர் உயரத்தைத் தாவிய ஏ.ஜினோயன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் இம்மூன்று வீரர்களும் முதல் தடவையாக பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனினும், இப்போட்டியில் 4.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு இவ்விரண்டு வீரர்களும் மேற்கொண்ட முயற்சிகள் தவறவிடப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக, சுகிர்தன் தனது இரண்டாவது முயற்சியில் மைதானத்தின் வெளிப்புறமாக விழுந்ததால் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளானார். எனவே அவர் போட்டியிலிருந்து இடைநடுவில் விலகிக் கொண்டார்.
ஹெரினாவுக்கு 2ஆவது இடம்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, 1.54 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தியகமவில் இடம்பெறும் 21ஆவது இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டிகள்
டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில்…
எனினும், இப்போட்டியில் 1.54 மீற்றர் உயரத்தை முதலில் தாவிய ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியைச் சேர்ந்த யசோதா தேஜானி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜோன் டார்பர்ட் மெய்வல்லுனர் போட்டிகளில் உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று வருகின்ற ஹெரீனா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 4 ஆவது இடத்தையும் (1.45 மீற்றர்), கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4 ஆவது இடத்தையும் (1.50 மீற்றர்) பெற்றுக்கொண்டார்.
எனினும், கடந்த மே மாதம் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில் 1.42 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற ஒரேயோரு பாடசாலை மாணவியான ஹெரீனா, நாளை மறுதினம் (21) நடைபெறவுள்ள பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்டு தங்கப் பதக்கதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உபாதையுடன் போட்டியிட்ட மிதுன்ராஜ்
போட்டிகளின் முதல் நாளான இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், வெண்கலப் பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தார்.
குறித்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட உபாதையுடன் போட்டியிட்ட அவர், 14.55 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்துடன் திருப்தி அடைந்தார்.
இதேவேளை, ஈட்டி எறிதல் மற்றும் பரிதிவட்டம் எறிதல் போட்டிகளிலும் அதிக கவனத்தை செலுத்தி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மிதுன்ராஜ், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.07 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 15.46 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், 14.71 மீற்றர் தூரத்தை எறிந்த கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து போகொடகே வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, மிதுன்ராஜ், கலந்துகொள்ளவுள்ள பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.
சொந்த சாதனையை முந்திய பாரமி
17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி, இன்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். அதற்காக அவர் 6 நிமிடங்களும் 37.9 நிமிடங்களை எடுத்துக் கொண்டார்.
ஆசிய சவால் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஆசிய சவால் கிண்ண
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இலங்கை 16 வயதுக்குட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடியுள்ள பாரமி வசந்தி, ஜப்பானின் கிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டீனாவின் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார். தாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
இதன்படி, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பாரமி பெற்றுக்கொண்டார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் குழாமில் சிறப்புக் குழுவிலும் அவர் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேநேரம், பாரமியுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட வலள ஏ ரத்னாயக்க கல்லூரி மாணவி பி. எதிரிசூரிய (07நிமி. 43.1 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், சுமனா மகளிர் கல்லூரி மாணவி எல். பிரேமதிலக்க (08நிமி. 01.3 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிரூஷ ஹஷேன், 7.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
முன்னதாக 2007 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியைச் சேர்ந்த ஆர். குணசிங்க நிலைநாட்டிய சாதனையை சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு ஹிரூஷ ஹஷேன் முறியடித்தார்.
இலங்கையில் முதற்தடவையாக நடைபெறவுள்ள சர்வதேச பேஸ்போல் தொடர்
இலங்கையில் முதல்தடவையாக அடுத்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச…
இதேவேளை, குறித்த போட்டியில் முதல் நான்கு இடங்களையும் புனித பேதுரு கல்லூரி மாணவர்கள் கைப்பற்றியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<