கோலூன்றிப் பாய்தலில் சொபிசன், சுவர்ணாவுக்கு தங்கம்

219

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகிய 90ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைக்கப் பெற்றன.

இதன்படி, 20 வயதின் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். இந்துக் கல்லூரி வீரர் கதிர்காமலிங்கம் சொபிசன் 3.90 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குகொண்ட சொபிசன், 4.00 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சோபிதனுடன் போட்டியிட்ட தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் ஜெகதீஸ்வரன் கஸ்மிதன், 3.80 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சிவபாதம் சுவர்ணா தங்கப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 2.80 மீட்டர் உயரத்தை தாவியிருந்தார்.

இறுதியாக இவர், கடந்த ஜூன் மாதம் கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இதே வயதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை, 20 வயதின் கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி வீரர் கே. தேவநாதமிதுன், 13.68 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல் பதக்கத்தை சுவீகரித்தார்.

அத்துடன், 22 வயதின் கீழ் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் திகன, ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலை வீரர் யதீஷன் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 16 நிமிடங்கள் 43.4 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இது இவ்வாறிருக்க, 20 வயதின் கீழ் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் யோஷித்த ஷோகஞ்சி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த அஷ்மிக்க கேஷான் கோரளகே புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 15.64 மீட்டர் தூரம் பாய்ந்து திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<