கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற FA கிண்ணத்தின் 32 அணிகளைக் கொண்ட சுற்றில் பெனால்டி முறையில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்ட யாழ்ப்பாணம் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் தீர்மானம் மிக்க 16 அணிகளைக் கொண்ட சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.
சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள்
ஏற்கனவே, இதற்கு முன்னைய சுற்றில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியின்கீழ் இடம்பெற்ற போட்டியில் பாடும் மீன் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் நீர்கொழும்பு யூபிற்றர்ஸ் அணியை வெற்றிகொண்டது.
அதேபோன்று, டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கு கொள்ளும் அணிகளில் ஒன்றான பொலிஸ் விளையாட்டுக் கழகம் 64 அணிகளைக் கொண்ட சுற்றில் பண்டாரவளை லிபேர்டி விளையாட்டுக் கழகத்தை 9-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் ஆரம்ப முயற்சியாக பாடும் மீன் அணியின் ஞானபிரதாப்பிற்கு வழங்கப்பட்ட பந்தை அவர், கோல்களுக்குள் உயர்த்தி அனுப்ப, பொலிஸ் கோல் காப்பாளர் துமித் சசித அதனை தட்டி விட்டார்.
அதன்போது வந்த பந்தை யாழ் தரப்பினர் மீண்டும் உயர்த்தி உதைய, துமித் சசித பந்தை வெளியே தட்டி எதிரணிக்கு கோணர் உதைக்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். எனினும், பாடும் மீன் வீரர்கள் கோணர் உதை மூலம் சிறந்த பயனைப் பெறவில்லை.
அதன் பின்னர் பொலிஸ் அணி வீரர்கள் தொடர்ந்து பாடும் மீனின் கோலை நோக்கி மேற்கொண்ட உதைகளை அனுபவம் மிக்க கோல் காப்பாளர் ராஜ்குமார் சிறந்த முறையில் தடுத்துப் பிடித்தார்.
அதன் பின்னர் பாடும் மீன் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் உதையின்போது, அவர்கள் உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு மேலால் சென்றது.
பொலிஸ் தரப்பின் மத்திய கள வீரர்கள் சிறந்த முறையில் எதிரணியிடமிருந்து பெற்று முன்னே வழங்கிய பந்துகளை, அவ்வணியின் முன்கள வீரர்கள் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறினர்.
பின்னர் அவ்வணியின் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்து, சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் ஷமிக குரேராவுக்கு செல்ல, அவர் பந்தை கம்பங்களுக்கு வெளியே உதைந்தார். இது அவர்களுக்கு முதல் பாதியில் கிடைத்த சிறந்த வாய்ப்பாகவே இருந்தது.
அதன் பின்னர் முதல் பாதியின் ஆதிக்கத்தை அதிகமாக பொலிஸ் அணியினரே தம் பக்கம் வைத்திருந்தனர்.
மத்திய களத்தில் இருந்து பொலிஸ் அணியின் நுவன்த ஷாரக கோலை நோக்கி வேகமாக நேரே உதைய, பந்து கம்பங்களுக்கு சற்று மேலால் சென்றது. குறித்த உதையே முதல் பாதியில் கோலுக்காக பெறப்பட்ட இறுதி முயற்சியாக இருந்தது.
முதல் பாதி : பொலிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 பாடும் மீன் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆரம்பமாகி முதல் நிமிடத்தில் இருந்தே பொலிஸ் வீரர்களின் வேகம் மிகவும் அதிகரித்தது. அதன்போது அவர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைக்க, அதனை அணித் தலைவர் சம்பத் பதிரன கம்பங்களுக்கு மேலால் உதைந்தார்.
பொலிஸ் வீரர் ரனிசுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பின்போது, அவர் கோல் கம்பங்களுக்கு மிக அண்மையில் இருந்து கோல் காப்பாளரைத் தாண்டி அடித்த பந்து, கம்பங்களுக்கு மேலால் சென்றது.
பொலிஸ் அணியின் கோல் காப்பாளர் தனது எல்லைக்கு வெளியே வந்து பந்தை தொட்டதன் காரணமாக, பாடும் மீன் தரப்பினருக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் உதைந்த பந்து தடுப்பு வீரர்களில் உடம்பில் பட்டு திசை மாறியது.
பின் களத்தில் இருந்து பந்தைப் பெற்ற யாழ் தரப்பினர் நீண்ட தூர உதையை மேற்கொண்டு எல்லைக் கோட்டிற்கு பந்தை வழங்கி, பின்னர் மீண்டும் மத்திய களத்திற்கு உள்ளனுப்பினர். இறுதியாக புனித பத்திரிசியார் கல்லூரி வீரரான சாந்தனிடம் வழங்கப்பட்ட பந்தை, அவர் கோலை நோக்கி உதைய, பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது.
வளமேதுமின்றி வளர்ந்துநிற்கும் நாவாந்துறை சென். மேரிஸ் அணி
பொலிஸ் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது, திலன்க பெர்னாண்டோ உதைய, நுவன்த ஷாரக பந்தை தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். எனினும், இறுதியாக ராஜ்குமார் பந்தை தட்டி, தன்னகத்தே கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து பந்தை தம்மகத்தே வைத்துக்கொள்வதில் விருந்தினராக வந்திருந்த பாடும் மீன் வீரர்கள் சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து, அணித் தலைவர் சம்பத் பந்தை கோலுக்குள் அடித்தபொழுது, கம்பங்களில் பட்டு பந்து வெளியேறியது.
யாழ் வீரர்களுக்கு கிடைத்த இறுதி வாய்ப்பாக, கோணர் வாய்ப்பொன்றின்போது கோல் காப்பாளர் தட்டி தன்னிடம் வந்த பந்தை, ஜோன்குயின்டன் உதைய, பந்து கம்பங்களுக்கு வெளியால் சென்றது.
இறுதி நேரத்தில் பொலிஸ் தரப்பு பெனால்டி உதைக்கான சந்தர்ப்பத்தை சாதகமாக்கும் நோக்கோடு, தமது கோல் காப்பாளரை மாற்றீடு செய்தது.
முழு நேரம் : பொலிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 பாடும் மீன் விளையாட்டுக் கழகம்
பெனால்டி உதை
- விசோத் (பா.மீ) – விசோத் அடித்த பந்து கோலின் வலது புற மூலையினால் கம்பங்களுக்குள் சென்றது
- சுஜித் சஞ்சீவ (பொலிஸ்) – இவரது பந்து இடது புற கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.
- கீதன் (பா.மீ) – இவர் உருட்டி அடித்த பந்து கோலுக்குள் சென்றது
- ராபிக் (பொலிஸ்) – சிரேஷ்ட வீரரான இவர் அடித்த பந்து கோல் காப்பாளரின் கைகளில் பட்டவாறு கோலுக்குள் சென்றது.
- ஜோன்குயின்டன் (பா.மீ) – இவரது உதையும் எந்த தடைகளும் இன்றி கோலாகியது.
- சம்பத் பதிரன (பொலிஸ்) – இவரது உதையை கோல் காப்பாளர் ராஜ் பாய்ந்து பிடித்தார்.
- சான்தன் – இறுதியாக பாடும் மீன் அணியின் வெற்றி கோலை சான்தன் பெற்றார்.
பெனால்டி முடிவு : பொலிஸ் விளையாட்டுக் கழகம் 1 – 4 பாடும் மீன் விளையாட்டுக் கழகம்
இந்த வெற்றியின்படி, பாடும் மீன் அணி அடுத்து இடம்பெறவுள்ள போட்டியில் பிரபல களுத்துறை புளு ஸ்டார் அணியை யாழ்ப்பாணத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
போட்டியின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த பாடும் மீன் அணியின் பயிற்றுவிப்பாளர் உதயனன், ”இன்றைய போட்டி சிறந்த ஒரு போட்டி. இதில் நாம் எமது முக்கிய இரண்டு பின்கள வீரர்கள் இன்றியே விளையாடினோம். எனினும் இதன்மூலம் நாம் வெளி அணிகளுடன் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை நன்கு கற்றுக்கொண்டோம்.
எமது அடுத்த போட்டி சுபர் லீக்கில் விளையாடும் ஒரு முக்கிய அணியுடனாக இருக்கின்றது. எனினும் நாம் அவர்களையும் எம்மைப் போன்ற ஒரு அணியாகவே பார்க்கின்றோம். அவர்களுடன் சிறப்பாக விளையாடுவோம். யாழில் இடம்பெறும் எமது அடுத்த போட்டியின்போது வரும் பார்வையாளர்கள் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது யாழில் உள்ளவர்கள் கால்பந்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதைப் பார்க்க முடியும்” என்றார்.
தோல்வியின் அதிருப்தியில் இருந்த பொலிஸ் அணியின் வீரரும் பயிற்றுவிப்பாளரமான சம்பத் கருத்து தெரிவிக்கும்பொழுது, ”எமது வீரர்கள் கிடைத்த பல வாய்ப்புக்களையும் தவறவிட்டனர். இதன் காரணமாக பெனால்டி வரை போட்டி சென்றது. பெனால்டியில் எமக்கு அதிஷ்டம் இருக்கவில்லை. எமது வீரர்கள் பயிற்றுவிப்பாளர் சொன்னதை செய்யாமையே தோல்விக்கு முக்கிய காரணம்.
எதிரணி வீரர்களின் விளையாட்டைப் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களது விளையாட்டு முழுமையாகவே அழகாகவும், சிறப்பாகவும் இருந்தது. இளம் வீரர்களாக இருந்து, ஒரு குழுவாக செயற்பட்டு அவர்கள் காண்பித்த விளையாட்டின் அழகே அவர்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது” என்றார்.
மஞ்சள் அட்டை
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – குமார லன்கேஸ்வர 67′
பாடும் மீன் விளையாட்டுக் கழகம் – தினேஷ் குமார் 19′