19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான போட்டியில் மஹாநாம கல்லூரியை தோற்கடித்த லும்பினி கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.
எனினும் போட்டி சமநிலையில் நிறைவுபெற்றது. அதேபோன்று நேற்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளின் முதல் நாள் நிறைவில் குருகுல கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகள் முன்னிலை வகிக்கின்றன.
மஹாநாம கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி
கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் இரண்டாம் நாள் தொடங்கும் வேளையில் மஹாநாம கல்லூரி 2 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மேலும் 166 ஓட்டங்களை பெற்றால் முதல் இன்னிங்ஸ் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மஹாநாம அணியினருக்கு கவிந்து முனசிங்க சிறப்பான ஆரம்பத்தை வழங்கினார்.
எனினும் தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் மஹாநாம கல்லூரி 68.2 ஓவர்களில் 198 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனித்து போராடிய கவிந்து முனசிங்க 84 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் லும்பினி கல்லூரியின் அணித்தலைவர் தனுக தபரே 4 விக்கெட்டுகளையும் விமுக்தி குலதுங்க 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய லும்பினி கல்லூரி 38.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. ரொவின் பீரிஸ் மற்றும் கவின் பீரிஸ் முறையே 36 மற்றும் 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஹஷான் சந்தீப மற்றும் விஹான் முதலிகே தலா 3 விக்கெட் வீதம் வீழ்த்தினர். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி 70.5 ஓவர்களில் 216 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் தனுக தபரே அரைச்சதம் கடந்தார். மஹாநாம கல்லூரி சார்பாக நிதுக வெளிகல 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) : 216/10 (70.5) – தனுக தபரே 50, சரித் மிஹிரங்க 36, ரவிந்து சஞ்சீவ 34, நிதுக வெளிகல 3/48
மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) : 198/10 (68.2) – கவிந்து முனசிங்க 84, விஹான் முதலிகே 34, சாலித சுபசிங்க 20, தனுக தபரே 4/53, விமுக்தி குலதுங்க 3/51
லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) : 155/10 (38.1) – ரொவின் பீரிஸ் 36, கவின் பீரிஸ் 31, வினு ஹேமால் 21, ஹஷான் சந்தீப 3/17, விஹான் முதலிகே 3/21, நிதுக வெளிகல 2/29)
குருகுல கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற குருகுல கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி 83.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த குருகுல கல்லூரி அணியினர் 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
துடுப்பாட்டத்தில் அசத்திய உதார ரவிந்து 80 ஓட்டங்களை குவித்தார். அஷிந்த மல்ஷான் 47 ஓட்டங்களையும் துமிந்த சுதாரக 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் அசத்திய நிதுக மல்சித் 27 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட்டை இழந்து 22 ஓட்டங்களை பெற்றிருந்தது.
குருகுல கல்லூரி : 230 (83.1) – உதார ரவிந்து 80, அஷிந்த மல்ஷான் 47, துமிந்த சுதாரக 34, நிதுக மல்சித் 5/27, ஹரீன் புத்தில 3/80
புனித அலோசியஸ் கல்லூரி : 22/1 (9) – கிம்ஹான ஆஷிர்வாத 15
தர்ஸ்டன் கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி
தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பெனடிக்ட் கல்லூரி களத்தடுப்பினை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தர்ஸ்டன் அணியினர் ஆரம்பம் முதலே சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். 61 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தர்ஸ்டன் கல்லூரி ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அசத்திய ஷவின் பிரபாஸ் 75 ஓட்டங்களையும் நிபுன் லக்ஷான் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில், ரிஷான் கவிஷ்க 46 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
தர்ஸ்டன் கல்லூரி 256/8d (61) – ஷவின் பிரபாஸ் 75, நிபுன் லக்ஷான் 62, நிமேஷ் லக்ஷான் 24, ரிஷான் கவிஷ்க 4/46, சமிந்த விஜேசிங்க 2/35
புனித பெனடிக்ட் கல்லூரி – 43/3 (23) – தினித்த பஸ்நாயக்க 20*