சகலதுறையிலும் அசத்திய மஹேஷ் தீக்ஷண: புனித பெனடிக்ட் கல்லூரிக்கு 5 விக்கெட்டுகளினால் வெற்றி

230
Schools Cricket

பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகள் இன்று நிறைவடைந்தன. பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் கண்டி புனித அந்தோனியார் கல்லூரிக்கு அதிர்ச்சியளித்த கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி 5 விக்கெட்டுகளினால் வெற்றியை சுவீகரித்தது. ஏனைய மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தன.

கண்டி புனித அந்தோனியார் கல்லூரி எதிர் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி

பந்துவீச்சாளர்களுக்கு உசிதமான ஆடுகளத்தில் இப்போட்டி இடம்பெற்றதுடன், நேற்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித அந்தோனியார் கல்லூரி 128 ஓட்டங்களுக்கு சுருண்டது. பதிலுக்கு முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி முதல் தினம் நிறைவடையும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 70 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி மஹேஷ் தீக்ஷண பெற்றுக் கொடுத்த 72 ஓட்டங்களின் உதவியுடன் 154 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் சந்தருவன் தர்மரத்ன 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி மீண்டும் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் அசத்திய சமிந்து விஜேசிங்க 17 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்படி புனித பெனடிக்ட் கல்லூரிக்கு 102 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுடன், அவ்வணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளினால் வெற்றியை பெற்றுக் கொண்டது. புனித பெனடிக்ட் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் டிலான் சதுரங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 128 (35.4) – சதீஷ் விக்ரமாராச்சி 26, மொஹமட் அப்சர் 19, டெவோன் ஸ்டவுடர் 19, மஹேஷ் தீக்ஷன 5/23, சலன சங்கல்ப 2/33

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 154 (51.2) – மஹேஷ் தீக்ஷன 72, கவீஷ ஜயதிலக்க 18, சந்தருவன் தர்மரத்ன 4/55

புனித அந்தோனியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 127 (39.2) – தீக்ஷ குணசிங்க 25, மொஹமட் அப்சர் 21, சமிந்து விஜேசிங்க 4/17, மஹேஷ் தீக்ஷன 3/29

புனித பெனடிக்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 105/5 (34.3) – டிலான் சதுரங்க 38, சதீஷ் விக்ரமாராச்சி 2/13

முடிவு: புனித பெனடிக் கல்லூரி 5 விக்கெட்டுகளினால் வெற்றி.


கொழும்பு ஆனந்த கல்லூரி எதிர் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி

அபார துடுப்பாட்டத்தின் காரணமாக ஆனந்த கல்லூரி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 361 ஓட்டங்களை குவித்ததுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி முதல் நாள் நிறைவில் விக்கெட் இழப்பேதுமின்றி 5 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றைய தினம் தனது சிறப்பான பந்துவீச்சினால் புனித ஜோசப் கல்லூரியை திணறடித்த திலீப ஜயலத் 23 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் காரணமாக புனித ஜோசப் கல்லூரி 71.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி வெறும் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நிபுன் சுமனசிங்க அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

6 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த ஆனந்த கல்லூரி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 361/7d (64) – சஹன் சூரவீர 104, கவிஷ்க அஞ்சுல 73, சம்மு அஷான் 66, அசெல் சிகேரா 32, கமேஷ் நிர்மால் 26*, துஷான் ஹெட்டிகே 23, நிபுன் சுமணசிங்க 4/68, ஹரீன் குரே 2/123

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 138 (71.4) – நிபுன் சுமணசிங்க 28, கெமரன் துருகே 24, திலீப ஜயலத் 7/23

ஆனந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 28/1 (6)

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.


காலி புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி

புனித அலோசியஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட 270 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி முதல் நாள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 14 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்று தமது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவ்வணி சார்பில் மிஷென் சில்வா மற்றும் தருஷ பெர்னாண்டோ அரைச் சதங்கள் கடந்தனர். இதன்படி புனித செபஸ்டியன் கல்லூரி 300 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் புனித அலோசியஸ் கல்லூரியின் ஹரீன் புத்தில 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி போட்டி நிறைவடையும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றிருந்தது. புனித அலோசியஸ் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் அஷேன் பண்டார 52 ஓட்டங்கள் குவித்ததுடன், புனித செபஸ்டியன் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் தருஷ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 270 (80.3) – அஷேன் பண்டார 125, நிலுக்ஷ துல்மின 43, ஹரீன் புத்தில 31, அவிஷ்க பெர்னாண்டோ 2/52, பிரவீண் ஜயவிக்ரம 2/64

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 300 (70.3) – மிஷென் சில்வா 68, தருஷ பெர்னாண்டோ 50, நுவனிந்து பெர்னாண்டோ 43, அவிஷ்க பெர்னாண்டோ 32, ஹரீன் புத்தில 4/111, கவிக டில்ஷான் 3/74

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 175/5 (55) – அஷேன் பண்டார 52, நிலுக்ஷ துல்மின 34, தருஷ பெர்னாண்டோ 3/47

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.


கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் கண்டி தர்மராஜ கல்லூரி

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றைய தினம் அவ்வணி 282 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அசத்திய பசிந்து சாணக 93 ஓட்டங்களையும் முதித லக்ஷான் 65 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் உபேந்திர வர்ணகுலசூரிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு ஆடுகளம் பிரவேசித்த தர்மராஜ கல்லூரியின் தேஷான் குணசிங்க தனி ஒருவராக போராடி 86 ஓட்டங்கள் குவித்த போதிலும், ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததன் காரணமாக அவ்வணி 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் தனது கைவரிசையை காட்டிய விஹான் குணசேகர 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரி போட்டி நிறைவடையும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றிருந்தது. துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்ட விஹான் குணசேகர 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 282 (87.2) – பசிந்து சாணக 93, முதித லக்ஷான் 65, சஷிக்க கமகே 36, உபேந்திர வர்ணகுலசூரிய 3/34, கிஹான் விதாரண 2/80

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 224 (63.2) – தேஷான் குணசிங்க 86, டில்ஷான் நவிந்த 30*, விஹான் குணசேகர 5/55, இனோஷ குணவர்தன 2/12

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 138/4 (29) – விஹான் குணசேகர 40, சஷிக்க கமகே 25*, உபேந்திர வர்ணகுலசூரிய 2/39

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.