லும்பினி கல்லூரி 8 விக்கெட்டுகளினால் வெற்றி

341
Singer U19 Schools Cricket October 23rd roundup

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டியில் புனித சேர்வேஷஸ் கல்லூரியை 8 விக்கெட்டுகளினால் தோற்கடித்த லும்பினி கல்லூரி இலகு வெற்றியை சுவீகரித்தது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சேர்வேஷஸ் கல்லூரி 54.5 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. லும்பினி கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் அசத்திய விமுக்தி குலதுங்க 5 விக்கெட்டுகளையும் கனிஷ்க மதுவந்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். புனித சேர்வேஷஸ் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் சந்தரு நெத்மின அதிகபட்சமாக 22 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து களமிறங்கிய லும்பினி கல்லூரி 41.2 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அற்புதமாக பந்துவீசிய சஷிக துல்ஷான் (6/37) மற்றும் சந்தரு நெத்மின (4/38) தமக்கிடையே 10 விக்கெட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர். லும்பினி கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் தனுக தபரே 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

59 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித சேர்வேஷஸ் கல்லூரி மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியது. பந்துவீச்சில் தன் கைவரிசையைக் காட்டிய தனுக தாபரே 5 விக்கெட்டுகளை சாய்க்க, புனித சேர்வேஷஸ் கல்லூரி 122 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித சேர்வேஷஸ் கல்லூரி சார்பாக இம்முறையும் சந்தரு நெத்மின அதிகபட்சமாக 39 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் விமுக்தி குலதுங்க 2 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.

64 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய லும்பினி கல்லூரி, 13.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை சுவீகரித்துக்கொண்டது. ரவிந்து சஞ்சீவ ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

புனித சேர்வேஷஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 89 (54.5) – சந்தரு நெத்மின 22, விமுக்தி குலதுங்க 5/19, கனிஷ்க மதுவந்த 3/35

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 148 (41.2) – தனுக தாபரே 39, ரவீஷ சத்சர 32, சஷிக துல்ஷான் 6/37, சந்தரு நெத்மின 4/38

புனித சேர்வேஷஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 122 (45.2) – சந்தரு நெத்மின 39, தனுக தாபரே 5/31, விமுக்தி குலதுங்க 2/40

லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 66/2 (13.1) – ரவிந்து சஞ்சீவ 36*

முடிவு – லும்பினி கல்லூரி 8 விக்கெட்டுகளினால் வெற்றி.