சகல துறையிலும் பிரகாசித்த நிபுன் லக்க்ஷான்: தர்ஸ்டன் கல்லூரி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவு

270
U19 Cricket - March 14th

மக்கோன, சாரே கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நான்காவதும் இறுதியுமான சிங்கர் டிவிஷன் I காலிறுதிப் போட்டியில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி டக்வத் லூயிஸ் முறைப்படி மொறட்டுவ, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியை 108 ஓட்டங்களால் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

ஏற்கனவே, அரையிறுதிப் போட்டிகளுக்கு கொழும்பு நாலந்த கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகள் தெரிவாகியுள்ள நிலையில், இறுதி அணியை தீர்மானிக்கும் காலிறுதிப் போட்டியில் கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி மற்றும் மொறட்டுவ, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகள் மோதிக்கொண்டன.

அந்த வகையில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. அதனையடுத்து, துடுப்பாட களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி குறித்த 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய நிபுன் லக்க்ஷான் அதிக பட்ச ஓட்டங்களாக 82 ஓட்டங்களை பதிவு செய்தார்.

அத்துடன், கசுன் அபேரத்ன மற்றும் சமன் பிரபாஷ் ஆகியோர் முறையே 45, 43 ஓட்டங்களை பங்களிப்பு செய்தனர். அதேநேரம் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி சார்பாக தாரக பெர்னாண்டோ 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.  

கடின இலக்கான 269 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, சமன் பிரபாஷ் மற்றும் சதரு டயசின் அதிரடி பந்து வீச்சில் 32 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதிக பட்ச ஓட்டங்களாக கவின் பெர்னாண்டோ 40 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றமையினால் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 108 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

அதேநேரம் அதிரடியாக பந்து வீசி கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரியின் வெற்றியை உறுதிச் செய்த சமன் பிரபாஷ் மற்றும் சதரு டயஸ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அத்துடன்,  நிபுன் லக்க்ஷான் பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்டு அணி சார்பாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு : 269/8 (50) – நிபுன் லக்க்ஷான் 82, கசுன் அபேரத்ன 45, சமன் பிரபாஷ் 43, தாரக பெர்னாண்டோ 3/64

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொறட்டுவ : 153 (32) – கவின் பெர்னாண்டோ 40, சமன் பிரபாஷ் 3/26, சதரு டயஸ் 3/32, நிபுன் லக்க்ஷான் 2/20

போட்டியின் முடிவு : தர்ஸ்டன் கல்லூரி 108 ஓட்டங்களால் வெற்றி.

குறிப்பு : இன்று நடைபெறவிருந்த ரிச்மண்ட் மற்றும் மலியதேவ கல்லூரிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி சீரற்ற மைதான நிலைமை காரணமாக பிற்போடப்பட்டது.