19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான டிவிசன் 1 பிரிவில் இரண்டு நாட்களை கொண்ட நொக் அவுட் சுற்றுப் போட்டிகளுக்கான இரண்டு அரையிறுதி போட்டிகள் இன்றைய நாள் நடைபெற்றன. குறித்த போட்டிகளில் ஓட்டங்களை குவித்த கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி வலுவான நிலையிலும் அதேநேரம் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த புனித பேதுரு கல்லூரி, தமது சிறந்த பந்து வீச்சின் மூலம் ஆனந்த கல்லூரியின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

மக்கோன, சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி அணித் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி இன்றைய தினம் ஆட்டம் நிறைவின் போது 97 ஓவர்கள் துடுப்பாடி சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 289 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

துடுப்பாட்டத்தில் தர்ஸ்டன் கல்லூரி சார்பாக இன்றைய தினம் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நிபுன் லக்க்ஷான் அதிக பட்ச ஓட்டங்களாக 77 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை மறுமுனையில் துடுப்பாடிய பவன் பிரபாஷ் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களுடன் களத்தில் இருகின்றார்.

ரிச்மண்ட் கல்லூரி சார்பாக அதிரடி பந்து வீச்சை வெளிப்படுத்திய அவிந்து தீக்ஷண தர்ஸ்டன் கல்லூரியின் ஓட்டங்களை கட்டுப்படுத்தி 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அதேநேரம், சதுன் மென்டிஸ் 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.  

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 289 (97) – நிபுன் லக்க்ஷான் 77 , பவன் பிரபாஷ் 73*, யெஷான் விக்கிரமாராச்சி 47, பிரகீஷ மெண்டிஸ் 22, அவிந்து தீக்க்ஷன 5/78, சந்துன் மெண்டிஸ் 4/72


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

கொழும்பு மூவர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.  

அதற்கமைய துடுப்பாடக் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிரடி பந்து வீச்சினால், 71.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்து கொண்டது.

புனித பேதுரு கல்லூரி சார்பாக அதிக பட்ச ஓட்டங்களாக ஷிவான் பெரேரா 68 ஓட்டங்களை பதிவு செய்தார். ஆனந்த கல்லூரியின் அதிரடி பந்து வீச்சில் ஒற்றை இலக்கங்களுடன் புனித பேதுரு கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க, இந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய  ரன்மித் ஜயசேன நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார், எனினும், துரதிஷ்டவசமாக 43 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து சென்றார்.

அதேவேளை இன்றைய தினம் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்த கொழும்பு ஆனந்த கல்லூரி சார்பாக அசெல் சிகேரா 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அதேநேரம் சம்மு அஷான் மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனையடுத்து, இலகுவான முதல் இன்னிங்க்ஸ் இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஆனந்த கல்லூரி, எதிர்பாராத வகையில், புனித பேதுரு கல்லூரியின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு இன்றைய நாள் நிறைவின் போது 21 ஓவர்கள் துடுப்பாடி 5 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ள நிலையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

அவ்வணி சார்பாக சஹன் சுரவீர அதிக பட்ச ஓட்டங்களாக 24 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். அதேவேளை, புனித பேதுரு கல்லூரி அணியின் அதிரடி பந்து வீச்சாளார் சந்தோஷ் குணதிலக்க இன்றைய தினம் மிகவும் சிறப்பாக பந்து வீசி வெறும் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆனந்த கல்லூரியை துவம்சம் செய்தார்.

அந்த வகையில், மேலும் முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கு 136 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையில் எஞ்சிய ஐந்து விக்கெட்டுகள் கையிருப்பில் ஆனந்த கல்லூரி இறுதி தினமான நாளை களமிறங்கவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 211 (71.3) – ஷிவான் பெரேரா 68, ரன்மித் ஜயசேன 43, மனேல்கர் டி சில்வா 26, சந்தோஷ் குணதிலக்க 20, அசெல் சிகேரா 3/36, சம்மு அஷான் 2/17, சாமிக்க குணசேகர 2/35

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 74/5 (21) – சஹன் சுரவீர 24, கழன விஜேசிறி 20, சந்தோஷ் குணதிலக்க 4/15