இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி

373

15 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான “சிங்கர் கிண்ண” மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றில் மொரட்டுவ ஸ்ரீ சந்திரசேகர மஹா வித்தியாலய அணி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றது.

கண்டி பல்லேகல சிறைச்சாலை மைதானத்தில் திங்கட்கிழமை (11) தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ சந்திரசேகர வித்தியாலய அணி யாழ்ப்பாண இளம் வீரர்களுக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியது.

இதன்படி களமிறங்கிய யாழ்ப்பாண சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 166 ஓட்டங்களைக் குவித்துக்கொண்டனர்.  

சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பாக T. தினோசன் அரைச்சதம் ஒன்றினை கடந்து 58 ஓட்டங்களினைக் குவிக்க, S. திரவனும் 22 ஓட்டங்களுடன் தனது தரப்புக்கு  வலுச்சேர்த்திருந்தார்.  

ஸ்ரீ சந்திரசேகர கல்லூரியின் பந்துவீச்சில் நிப்புன் லக்ஷன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மிஹிரன் விரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

அங்குரார்ப்பண T-10 தொடரில் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்

சுருக்கமடைந்துவரும் கிரிக்கெட் உலகில்…

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 167 ஓட்டங்களினை பெற பதிலுக்கு துடுப்பாடிய மொரட்டுவ கல்லூரியினர் 46.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தனர்.  

ஸ்ரீ சந்திரசேகர கல்லூரியின் துடுப்பாட்டத்தில் லக்ஷில சசிந்து 63 ஓட்டங்களினையும், நிரான் விராங்க ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களினையும் பெற்று தமது கல்லூரியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த இன்னிங்சில் யாழ்ப்பாண வீரரான ஜோனதன் பிரசங்க 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அரையிறுதிப் போட்டியின் வெற்றியாளராக மாறியிருக்கும் மொரட்டுவ ஸ்ரீ சந்திரசேகர மகா வித்தியாலய அணி, கொழும்பில் நடைபெறும் தொடரின் இறுதிப் போட்டியில் படபொல மகா வித்தியாலய அணியினை டிசம்பர் மாதம் 28ஆம் திகதி சந்திக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

சென் ஜோன்ஸ் கல்லூரி – 166 (50) T. தினோஷன் 58, S. திரவான் 22, நிப்புன் லக்ஷன்3/19, மிஹிரன் விரங்க 2/27

ஸ்ரீ சந்திரசேகர வித்தியாலயம் – 168/6 (46.4) லக்ஷில சசிந்து 63, நிரான் விராங்க41*, ஜோனதன் பிரசங்க 3/11

போட்டி முடிவு –  ஸ்ரீ  சந்திரசேகர         வித்தியாலயம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி