சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்தப்படும் 19 வயதுக்கு கீழான பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் மூன்று போட்டிகள் நிறைவடைந்தன.
ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் மஹிந்த கல்லூரி, காலி
காலி சர்வதேச மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் காலி மஹிந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களினால் கொழும்பு ஸாஹிராவை வீழ்த்தியது.
நேற்று (27) ஆரம்பமான இந்த ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஸாஹிரா கல்லூரிக்கு வழங்கியிருந்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஸாஹிரா கல்லூரி வீரர்களுக்கு எதிர்பார்த்த விதத்தில் ஓட்டங்கள் சேர்க்க முடியவில்லை. முதல் இன்னிங்சுக்காக 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். இதற்கு காரணமான மஹிந்த கல்லூரியின் நவோத் பரணவிதாரன, KK. கெவின் மற்றும் பசன் பெத்தன்கொட ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மஹிந்த கல்லூரி 6 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்திருந்த போது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டது. இதில் ஹன்சிக்க வலிஹிந்த அரைச்சதம் (58) தாண்டியிருந்தார்.
2018 இல் இலங்கை பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய பார்வை
தொடர்ந்து 139 ஓட்டங்கள் பின்னடைவாக, இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி இம்முறையும் மோசமான ஆட்டத்தை வெளிக்க்காட்டி 98 ஓட்டங்களை மாத்திரமே இரண்டாம் இன்னிங்சில் பெற்று இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. ஸாஹிராவை மீண்டும் பந்துவீச்சில் மிரட்டிய பசன் பெத்தன்கொட 4 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 108 (35) – மொஹமட் சமாஷ் 47, நவோத் பரணவிதாரன 3/07, KK. கெவின் 3/18, பசான் பெத்தன்கொட 3/39
மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 247/6d (63) – ஹன்சிக்க வலிஹிந்த 59, அஷென் கந்தம்பி 39, ரேஷான் கவிந்த 36*
ஸாஹிரா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 98 (51) – மொஹமட் றிபாத் 42, பசன் பெத்தன்கொட 4/19, கவிந்து எதிரிவீர 3/34
முடிவு – மஹிந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் புனித ஜோன்ஸ் கல்லூரி, பானதுறை
மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் மைதான சொந்தக்காரர்களான பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி புனித ஜோன்ஸ் கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் தோற்கடித்தது.
நேற்று தொடங்கிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த பிரின்ஸ் ஒப் கல்லூரி முதலில் துடுப்பாடி இமலாய மொத்த ஓட்டங்களான 350 ஓட்டங்களை 2 விக்கெட்டுக்களை இழந்து பெற்று முதல் இன்னிங்சை இடைநிறுத்திக்கொண்டது. இதனைப் பெற அவிந்து பெர்னாந்து (151*) மற்றும் சந்துன் பெர்னாந்து (113*) ஆகியோர் அபார சதம் கடந்து பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு உதவினர்.
மிகவும் சவால் நிறைந்த இலக்கு ஒன்றைத் தாண்ட பதிலுக்கு தம்முடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித ஜோன்ஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் 87 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. முதல் இன்னிங்சில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் பலோவ் ஒன் (Follow on) முறையில் துடுப்பாடிய ஜோன்ஸ் கல்லூரி இரண்டாம் இன்னிங்சிலும் பிரகாசிக்கத்தவறி 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.
பிரின்ஸ் ஓப் கல்லூரியின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்த வலதுகை சுழல் வீரர் சவிந்து பீரிஸ் மொத்தமாக வெறும் 63 ஓட்டங்களை இரண்டு இன்னிங்சுகளிலும் விட்டுக் கொடுத்து மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 350/2d (62) – அவிந்து பெர்னாந்து 151*, சந்துன் பெர்னாந்து 113*, விஷ்வ சத்துரங்க 70, சுமுது உதார 2/84
புனித ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 87 (50.1) – அஷான் தில்ஹார 27, சவிந்து பீரிஸ் 4/24, கெளமால் நாணயக்கார 4/47
புனித ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 140 (50.1) – சக்குன் ருக்ஷான் 78, சவிந்து பீரிஸ் 5/39, கெளமால் நாணயக்கார 3/58
முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி
திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு
நாலந்த கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று முடிந்த கொழும்பு நாலந்த கல்லூரி மற்றும் கண்டி திரித்துவ கல்லூரிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.
நேற்றைய நாளில் (27) ஆரம்பமான இந்த ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றியடைந்த திரித்துவக் கல்லூரி அணி முதல் இன்னிங்சுக்காக 63.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 227 ஓட்டங்களைப் பெற்றது. திரித்துவக் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அவிஷ்க செனாதீர 69 ஓட்டங்களைக் குவித்தார். மறுமுனையில் ரவீன் டி சில்வா நாலந்த கல்லூரிக்காக 4 விக்கெட்டுக்களை பதம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள்
தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட நாலந்த கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் 189 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டது. நாலந்த கல்லூரி சார்பாக சிறப்பாக செயற்பட்ட ரவிந்து டி சில்வா அரைச்சதம் தாண்டினார். திரித்துவக் கல்லூரியின் பந்துவீச்சில் திரவோன் பெர்சிவேல் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பின்னர் மீண்டும் திரித்துவக் கல்லூரி அணி தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. அபிஷேக் ஆனந்தகுமாரின் அதிரடி சதத்துடன் திரித்துவக் கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஆனந்தகுமார் 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 227 (63.2) – அவிஷ்க சேனாதீர 69, ஹசிந்த ஜயசூரிய 43, ரவீன் டி சில்வா 4/55
நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 189 (55.2) – ரவிந்து டி சில்வா 62, திரவோன் பெர்சிவேல் 4/37
திரித்துவக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 232/5 (75) – அபிஷேக் ஆனந்தகுமார் 110*, அவிஷ்க சேனாதீர 41, கவீஷ் மதுரப்பெரும 2/47
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி
தோமியர் கல்லூரியின் சொந்த மைதானத்தில் இன்று (28) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்றிருந்த புனித தோமியர் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய தோமியர் கல்லூரி இன்றைய ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதமாக காணப்பட்டதால் முதல் இன்னிங்சுக்காக 130 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. ரிச்மண்ட் கல்லூரி சார்பாக அவிந்து தீக்ஷன, அம்சி டி சில்வா மற்றும் டிலும் சுதீர ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
ஷெஹான் ஜயசூரியவின் சதத்தின் உதவியுடன் சிலாபம் மேரியன்ஸ் வலுவான நிலையில்
பதிலுக்கு முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய ரிச்மண்ட் கல்லூரிக்கும் ஓட்டங்கள் சேர்ப்பதில் சிரமம் காணப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் இன்றைய நாள் ஆட்ட முடிவில் 98 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் காணப்படுகின்றனர். தோமியர் கல்லூரியின் பந்துவீச்சில் ஷனோன் பெர்னாந்து 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130 (54.1) – மனீஷ ரூபசிங்க 42, சித்தார ஹப்புவின்ன 30, அவிந்து தீக்ஷன 3/16, அம்சி டி சில்வா 3/19, திலும் சுதீர 3/45
ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 98/8 (45) – வினுஜ கிரியெல்ல 29, ஷனோன் பெர்னாந்து 4/24
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் குருகுல கல்லூரி, களனி
மஹர சிறைச்சாலை மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித பேதுரு கல்லூரி அணி எதிரணிக்கு முதலில் துடுப்பாட்டத்தை வழங்கியது.
இதன்படி முதலில் துடுப்பாடிய குருகுல கல்லூரி 126 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக் கொண்டது. குருகுல கல்லூரிக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தல் தந்த மொஹமட் அமீன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரிக்கு, குருகுல வீரர்கள் பந்துவீச்சில் சவால் தந்தனர். இதனால், போட்டியின் முதல் நாள் நிறைவில் புனித பேதுரு கல்லூரி அணி 93 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. குருகுல கல்லூரியின் பந்து வீச்சு சார்பாக ப்ருத்துவி ருசார மற்றும் பிரவீன் நிமேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 126 (55.4) – ரசிந்து அரோஷ 42, மொஹமட் அமீன் 5/46, ஹசித்த கிரியெல்ல 2/11, சச்சின் சில்வா 2/18
புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 93/7 (41) – சுலக்ஷன பெர்னாண்டோ 22, ப்ருத்துவி ருசார 2/19, ப்ரவீன் நிமேஷ் 2/26
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.